முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமரின் கடிதத்தில் பிழை: தினமணி செய்தியால் திருத்தி வாசித்த ஆசிரியர்கள்

காரைக்கால், நவ.11: கல்வி உரிமை நாளைக் கொண்டாடும் வகையில் பிரதமர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பிழையான பெயரை, தினமணி வெளியிட்ட செய்தியால் திருத்தி வாசித்தனர் காரைக்கால் பள்ளி ஆசிரியர்கள். நாட்டி

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:05 PM
பகிர்:

காரைக்கால், நவ.11: கல்வி உரிமை நாளைக் கொண்டாடும் வகையில் பிரதமர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பிழையான பெயரை, தினமணி வெளியிட்ட செய்தியால் திருத்தி வாசித்தனர் காரைக்கால் பள்ளி ஆசிரியர்கள்.

நாட்டின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினமான நவ.11ஆம் தேதியை கல்வி உரிமை நாளாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. இதையொட்டி பிரதமர் மன்மோகன்சிங் மாணவர்களுக்கு மடல் ஒன்றை எழுதினார். ஆசாத்தின் கல்வித் தொண்டை குறிப்பிட்டும், அவரின் புகழை விளக்கியும் பிரதமர் கையெழுத்திட்ட தமிழ் மொழிக் கடிதத்தில் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் என பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நகல் எடுத்து புதுச்சேரி கல்வித் துறையும் காரைக்கால் உள்ளிட்ட பள்ளிகளுக்கு அனுப்பியது. அது அனுப்பிய சுற்றறிக்கையில் பிரதமரின் செய்தியை மாணவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் இந்த அறிவுறுத்தலை அனுப்பியது. ஆனால் பிரதமரின் கடிதத்தில் இருந்த பெயர் தவறை யாரும் ஒருபொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், மாணவர்கள் மத்தியில் முதல் கல்வி அமைச்சரின் பெயர் தவறாக மனதில் பதிவாகிவிடும் என்று விளக்கி, தினமணி நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரதமரின் கடித்தத்தில் உள்ள பெயரை மாற்றி ஆசாத்தின் இயற் பெயரை சரியாக உச்சரித்து இன்று கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது. இதுகுறித்த தினமணியின் செய்தி காலை பரவியதும் பெரும்பாலான பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் அவசர அவசரமாகத் தெரிவிக்கப்பட்டதாம்.

இருந்தபோதும், பிரதமரின் கடிதத்தை தவறான பெயர் சொல்லியும் வாசிக்காமல், பெயரைத் திருத்திய வகையிலும் வாசிக்காமல் பல பள்ளிகள் அலட்சியமாக இருந்தன. இது குறித்து, கல்வித்துறை வட்டாரத்துக்கு தகவலும் அனுப்பப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் வற்புறுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →