உள்ளாட்சித் தேர்தல்: காரைக்காலில் இருந்து கடத்தல் மது ‘தாராளம்”
காரைக்கால், செப். 28 : பொதுவாக காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு சாராயம், மதுபாட்டில்கள் தடையின்றிச் செல்லும். இப்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களை கட்டியதை ஒட்டி, மது வகைகளை ஏற்றிக்கொண்ட
காரைக்கால், செப். 28 : பொதுவாக காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு சாராயம், மதுபாட்டில்கள் தடையின்றிச் செல்லும். இப்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களை கட்டியதை ஒட்டி, மது வகைகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் இரவு பகலில் புதுவை எல்லையை சரளமாகக் கடக்கின்றன. எல்லையில் பணியாற்றும் இரு மாநில போலீஸாரும் கண்காணிப்பில், சோதனையில் தீவிரம் காட்டாததே இதற்குக் காரணம் என மக்கள் புகார் கூறுகின்றனர்.
புதுவையில் மது வகைகள் விலை கணிசமாகக் குறைவு. இதனால் புதுவைக்கு சுற்றுலா வருவோர், விருப்பப்படி மது பாட்டில்களை வாங்கி வாகனத்தில் ஏற்றிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடுத்த கட்டமாக தமிழகத்துக்கு மது வகைகளைக் கடத்தி லாபம் பார்ப்பவரும் இருக்கின்றனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது காரைக்காலில் இருந்து மது கடத்தலை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் காரைக்கால் வந்து இருமாநில அரசுத் துறைகளும் இணைந்து இதனை கண்காணிக்க வேண்டிய உத்திகளை வகுத்துச் சென்றனர். அதன்படி ஓரளவு நடந்தனர். ஆனால் அடுத்த மாதம் தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழகப் பகுதிக்கு காரைக்காலில் இருந்து செல்லும் மது வகைகள் கொஞ்சநஞ்சமல்ல என்கின்றனர் விவரம் அறிந்தோர்.
அண்மையில் ஒரு கார் மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கிச் சென்றபோது காரைக்காலில் விபத்தில் சிக்கியது. அந்த கார் விபத்தில் சிக்கியபோதுதான், போலீஸாருக்கே அதனுள் மது பாட்டில் பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. விபத்து இல்லையெனில் தாராளமாக அந்த வாகனம் எல்லையைக் கடந்திருக்கும். காரைக்காலில் பிரதான போக்குவரத்து சாலைகளின் எல்லையில் சோதனைச் சாவடிகள் இருந்தாலும், போலீஸார் கண்காணிப்பு இருக்கும் என்பது உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் காரைக்கால் எல்லையை ஒட்டிய தமிழகப் பகுதியில், காரைக்காலில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்ய வலுவான வகையில் தமிழக போலீஸாரைக் கொண்ட சோதனை சாவடிகள் உள்ளன. இருந்தும் இருமாநில போலீஸாரும் கண்டும் காணாமல் இருப்பதன் விளைவு, தரம் மற்றும் தரம் குறைந்த மது வகைகள் வாக்காளர்களுக்குப் போய்சேரவே உதவுகிறது. மேலும் பாக்கெட் சாராயம்கூட கடத்தப்படுவதாக புகார் உள்ளது. மது வகைக் கடத்தலை இருமாநில உரிய துறைகளும் கட்டுப்படுத்தவில்லை எனில், சமூக விரோதச் செயல்கள் தேர்தலின்போது தலை தூக்கவும், நியாயமற்ற தேர்தல் நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.