திருநள்ளாறு கோயில் தியான மண்டப மேல்தளம் சரிந்து விழுந்து பாதிப்பு
காரைக்கால், ஏப். 6 : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு வரும் தியான மண்டப மேல் தளத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இரவு சரிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் பக்தர்கள் யார
காரைக்கால், ஏப். 6 : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு வரும் தியான மண்டப மேல் தளத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இரவு சரிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ளார் ஸ்ரீ சனீஸ்வரபகவான். இந்த கோயிலுக்கு விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக கோவிலின் வெளி பிரகாரப் பகுதியில் தியான மண்டபம் கட்ட முடிவு செய்து, முழுவதும் நன்கொடையாளர் மூலம் கோவில் நிர்வாகம் ரூ.1 கோடி மதிப்பில் கட்டிவருகிறது.
தியான மண்டபம் 12 ஆயிரம் சதுர அடி பரப்பில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
மண்டபத்தின் மேல் தளத்துக்கு கான்கிரீட் போடும் அமைக்கும் பணி ஏறக்குறைய 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மண்டப தளத்தின் ஒரு பகுதி சுமார் 50 அடி அகலம், 100 அடி நீளத்தில் செய்யப்பட்ட கட்டுமானம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென சரிந்து விழுந்தது.
சனிக்கிழமை தரிசனத்துக்காக கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலையே பக்தர்கள் வரத் தொடங்கினர். கடும் சப்தத்துடன் சரிந்து விழுந்த போது, எந்த இடத்தில் இந்த சப்தம் வருகிறது என கோயில் ஊழியர்களும், பக்தர்களும் ஓடிச் சென்று பார்த்தனர்.
கட்டுமான இடத்தை சுற்றி பக்தர்கள் வராமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டிருந்ததால் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம், கோயில் நகரத் திட்ட செயற் பொறியாளர் வி.சண்முகசுந்தரம், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் இளஞ்செழியன் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
அடுத்த 2 மாதத்தில் மண்டபம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படும் நிலையில், மண்டபத்தின் தளம் சரிந்து விழுந்துள்ளது. கட்டுமானத்தின் தரத்தில் குறைபாடா என்பதை உறுதியாக ஆய்வு செய்யவேண்டும். முன்னணி கட்டுமான வல்லுநர்கள் குழு வந்து பரிசோதித்து சான்றிதழ் தந்த பிறகே, எஞ்சிய பணிகளை தொடரவேண்டும். அதுவே பக்தர்களுக்கு எதிர்காலத்தில் பாதுகாப்பு என கோயிலுக்கு வந்த பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.