மதுரையில் இனி சிலைகளுக்கு க்ரில்: ஆட்சியர் அறிவிப்பு
திருப்பரங்குன்றம், ஆக.7: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி - சின்ன உடைப்பு பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அம்பேத்கர், இமானுவல்சேகரன் சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்
திருப்பரங்குன்றம், ஆக.7: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி - சின்ன உடைப்பு பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அம்பேத்கர், இமானுவல்சேகரன் சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்றம் எழுந்தது. இதனால் அந்தப் பகுதி வழியாக பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
மதுரை விமான நிலையம் செல்லும் பிரதான சாலைப்பகுதி என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பேருந்துகள் வேறு பாதைகளில் திருப்பிவிடப்பட்டன. மதுரையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் திருப்பரங்குன்றம், திருமங்கலம் பாதைகளில் சென்றன. மதுரை அவனியாபுரம், பெருங்குடி, காரியாப்பட்டி மற்றும் மதுரை ரிங் ரோடு பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி., சிலையை சேதப் படுத்திய விஷமிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், மக்கள் அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, இனி தலைவர்களின் சிலைகளுக்கு கிரில் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தச் சம்பவம் வருந்தத் தக்கது. இது போன்ற விஷமத்தனமான செயல்களில் எவரும் ஈடுபடுவதை தடுத்து நிறுத்துவோம் என்றார்.