வங்கியில் குவியும் மாணாக்கர் : பணி பாதிப்பு, பாதுகாப்பற்ற நிலைமை
பண்ருட்டி, ஆக., 28 : அரசு பள்ளிகளில் 10, மற்றும் 12ம் வகுப்பு பயில்பவர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்காக மாணவ, மாணவிகள் தங்களது பெயரில் வங்கிக் கணக்குத் துவங்க அறிவுறுத்தப்பட்டுள்
பண்ருட்டி, ஆக., 28 : அரசு பள்ளிகளில் 10, மற்றும் 12ம் வகுப்பு பயில்பவர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்காக மாணவ, மாணவிகள் தங்களது பெயரில் வங்கிக் கணக்குத் துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பண்ருட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கடந்த ஒரு சில நாட்களாகவே, அப்பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இது குறித்து நமது செய்தியாளர் சீனிவாசன் அங்கிருந்து கூறுகையில், மாணவ, மாணவிகள் அதிகமாக வங்கிக்குள் ஒரேயடியாக நுழைவதால், வங்கிப் பணியும் பாதிக்கப்படுகிறது. அங்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் உரிய நேரத்தில் பணியை முடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
மேலும், வங்கியில் கூட்டம் அதிகமாக இருப்பதால், வங்கியில் கணக்குத் துவங்க வந்த பல மாணவ, மாணவிகள், அப்பகுதிகளில் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனர். பண்ருட்டியின் மையப் பகுதியான சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு வந்த மாணவ, மாணவிகள் பலரை பள்ளிச் சீருடையில் பல இடங்களில் சுற்றித் திரிவதைப் பார்க்க முடிகிறது. மிக நெரிசலானப் பகுதியில் மாணவ, மாணவிகள் சுற்றித் திரிவதால் அவர்களது பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
வங்கிக் கணக்குத் துவங்க வரும் மாணவ, மாணவிகளுடன் பள்ளியைச் சேர்ந்த ஒருவர் உடன் வந்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையிலோ அல்லது, ஒரு நாளைக்கு ஒரு வகுப்பு மாணாக்கர் வீதம், அப்பகுதியில் உள்ள பள்ளிகள் தங்களுக்குள் பேசி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகளை மட்டும் வங்கிக்கு அனுப்பும் வகையிலோ திட்டமிட்டு செயல்பட்டால் நெரிசலையும், விபத்தையும் தவிர்க்கலாம் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.