தூத்துக்குடி மீனவர்கள் தொழில்நுட்ப அடையாள அட்டை பெற விண்ணப்பம்
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட மீனவர்கள் உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட மீனவர்கள் உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடல் மீனவர்களுக்கு தேசத்தின் பாதுகாப்பு கருதியும், கடல் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும் போது, இயற்கை இடர்பாடுகளால் கடல் எல்லையை தாண்டும் போதும் மீனவர்களுக்கு உதவும் வகையில், அவர்களை பாதுகாக்க கைரேகையுடன் கூடிய உயிர் தொழில்நுட்ப அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து முழுநேர கடல் தொழில் புரியும் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் 12 ஆயிரத்து 40 மீனவர்கள் பற்றிய விவரங்கள் கணினியில் பதிவு செய்யும் பணிகள் முடிவடைந்து உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாமல் விடுபட்டு உள்ள மீனவர்கள் குறித்த பதிவுகள் 2–ம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. எனவே மீனவர்கள் அந்தந்த மீனவ கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர், எழுத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தங்களை பற்றிய முழு விவரங்களை புதன்கிழமை (டிசம்பர் 5) மாலைக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.