முகப்பு
தற்போதைய செய்திகள்

சரக்கு கண்ணை மறைத்தது: பாட்டிலை எடுத்துக் கொண்டு பணத்தை விட்டுச் சென்ற 'கண்ணிய’த் திருடர்கள்

பழனியில் இரு வேறு இடங்களில் கடைகளுக்குள் புகுந்து, வெறும் பாட்டில்களை மட்டும் எடுத்துக் கொண்டு பணத்தை அப்படியே விட்டுச் சென்ற கண்ணியத் திருடர்கள் குறித்த செய்தி, பரபரப்பாகப்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

பழனியில் இரு வேறு இடங்களில் கடைகளுக்குள் புகுந்து, வெறும் பாட்டில்களை மட்டும் எடுத்துக் கொண்டு பணத்தை அப்படியே விட்டுச் சென்ற கண்ணியத் திருடர்கள் குறித்த செய்தி, பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பழனி உடுமலை சாலையில் சண்முகா நதி அருகே டாஸ்மாக் கடை எண் 3208ஐ வழக்கம் போல் நேற்று இரவு பூட்டி விட்டுச் சென்றார் கடையின் மேற்பார்வையாளர் சண்முகம். இந்தக் கடையில் விற்பனையாளராக உள்ளார் வீரக்குமார். நேற்று இரவு கடையை மூடிவிட்டுச் செல்லும்போது, கடையில் ரூ. 60 ஆயிரம் பணத்தையும் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த 2 (ஃபுல் பாட்டில்) புட்டி மதுவை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.640. பாட்டில்களை மட்டும் எடுத்துக் கொண்டு, ரூ.60 ஆயிரத்தை அப்படியே விட்டுச் சென்றனர் என்பதை அறிந்த பொதுமக்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டனர்.

இதேபோல், பழனி இந்திரா நகரில் பாலு என்பவரின் மளிகைக் கடையில் புகுந்த மர்ம நபர்கள், ரூ.5 ஆயிரத்தை அப்படியே வைத்துவிட்டு, கடையில் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, அதில் இருந்த 2 பாதாம் பால் பாட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து பழனி டவுன் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.