முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்தடையை கண்டித்து வீரவநல்லூரில் கடையடைப்பு, மறியல்: 155 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் செவ்வாய்க்கிழமை 14 மணி நேர மின்தடை, ஊருக்குள் பஸ்கள் வந்து செல்லாததை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட 155 பேரைபோலீஸார் கைது செய்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் செவ்வாய்க்கிழமை 14 மணி நேர மின்தடை, ஊருக்குள் பஸ்கள் வந்து செல்லாததை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட 155 பேரைபோலீஸார் கைது செய்தனர்.

வீரவநல்லூரில் 14 மணி நேர மின்தடை அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள்,வியாபாரிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வீரவநல்லூர் ஊருக்குள் அரசு, தனியார் பஸ்கள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதி்க்கப்பட்டனர். இதை கண்டித்து செவ்வாய்க்கிழமை கடையடைப்பு, சாலை மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனிடையே செவ்வாய்க்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நகரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. கார், வேன் ஆட்டோக்கள் ஓடவில்லை. இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் பட்டமுத்து தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் மணி, பாபநாசம் கிளை மேலாளர் சுப்பிரமணியன், மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சாலமோன், குமாரசாமி மற்றும் பேரூராட்சித் தலைவர் எஸ்.கே. பழனிச்சாமி, வியாபாரிகள் சங்கத் தலைவர் பி. குமார், செயலர் பி.எம். அஷ்ரப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீரவநல்லூர் ஊருக்குள் பஸ்கள் வந்து செல்வது தொடர்பாக பிரச்னையில் போராட்டக்குழுவினர் கோரிக்கையை போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து போராட்டக்குழுவினர் ஊர்வலமாக பிரதான சாலைக்கு வந்தனர்.

அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி பிரதான சாலையில் துணை மின்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் சார்பில் பேரூராட்சி முன்னாள் தலைவர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், நகர தலைவர் துரைராஜ், திமுக சார்பில் வி.ஆர். சுடலை, அப்துல்ரகுமான், ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் பி. கற்பகம், கே.ஏ. மல்லிகா, கீதா, ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் கண்ணன், மனிதநேய மக்கள் கட்சியில் நவாஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் எம்.ஏ. ரகுமான், பாமகவில் முகம்மதுகனி, முத்துபாண்டியன் (அகில பாரத இந்து மகாசபை), முருகானந்தம் (இந்து தேசிய காங்கிரஸ்), பெரியார் பித்தன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) மறறும் அரசியல் கட்சியினர் தொழிற்சங்கத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 155 பேரை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →