வி.கே.புரம் மதுரா கோட்ஸ் ஆலை கதவடைப்பு:தொழிலாளர்கள் அதிர்ச்சி
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோடஸ் ஆலை புதன்கிழமை பிற்பகல் முதல் கதவடைப்பு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோடஸ் ஆலை புதன்கிழமை பிற்பகல் முதல் கதவடைப்பு செய்யப்பட்டது.
சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஆலை கதவடைப்பு செய்யப்பட்டது தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, தூத்துக்குடி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய 3 இடங்களில் மதுரா கோட்ஸ் ஆலை இயங்கி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் மதுரா கோட்ஸ் ஆலைகளில் தென்மாவட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் 780 பேர் நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் 11 ம் தேதி முடிவடையும் நிலையில் ஆலை நிர்வாகம் அதற்கு முன்பாகவே சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இதனிடையே சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் கூட்டைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர். மேலும் டிசம்பர் 6 ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் (ஸ்டிரைக்) ஈடுபட இருப்பதாக தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறை அலுவலகம், மதுரையில் தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட சம்பள உயர்வை மதுரை, தூத்துக்குடி மதுரா கோட்ஸ் தொழிலாளர்கள் ஏற்று கொண்ட நிலையில் விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலை தொழிலாளர்கள் ஏற்கவில்லை.
இந்த நிலையில் புதன்கிழமை ஆலைக்கு பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து டிச. 12 ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் ஆலை கதவடைப்பு செய்யப்பட்டது.
இது குறித்து ஆலை தரப்பில், சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும்போதே தொழிலாளர்கள் சட்ட விரோதமாக அதிகாரபூர்வமற்ற நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இல்லாமல் தொழிலாளர்கள் வேலைக்கு வராமல் இருப்பதால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.
மேலும் புதன்கிழமை (டிச. 12 ம் தேதி) காலை 7 மணி முதல் அதிகமான தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை புறக்கணித்து சட்டத்திற்கு விரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் நடைமுறையில் இருக்கும் விதிகளை மீறி ஒழுங்கீனமான முறையில் சக தொழிலாளிக்கு உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
ஆகவே ஆலை நிர்வாகம் வேறு வழியின்றி புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் கதவடைப்பு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது என தொழிலியல் உறவு மேலாளர் அ. பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.