முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் 2-வது நாளாக கரை ஒதுங்கிய இழுவை, மிதவைக் கப்பல்கள்

 காரைக்காலில் 2-வது நாளாக மற்றொரு மிதவை, இழுவைக் கப்பல்கள் கடல் சீற்றத்தால் வெள்ளிக்கிழமை காலை கரை

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

 காரைக்காலில் 2-வது நாளாக மற்றொரு மிதவை, இழுவைக் கப்பல்கள் கடல் சீற்றத்தால் வெள்ளிக்கிழமை காலை கரை ஒதுங்கியது. வியாழக்கிழமை வடக்கு வாஞ்சூர் அருகே மிதவைக் கப்பல் ஒன்று தரை தட்டி ஒதுங்கிய நிலையில் இது இரண்டாவது சம்பவமாகும். தரைதட்டிய கப்பல்களை கடலுக்குள் இழுத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

மும்பையிலிருந்து ஒடிஸா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு கடந்த நவ.29-ம் தேதி கிரேன் மற்றும் பொருள் ஏற்றிய 2 மிதவைக் கப்பல்களை, நான்கு இழுவைக் கப்பல்கள் இழுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட கடல் எல்லையில் வியாழக்கிழமை வரும்போது, ஒரு மிதவைக் கப்பலின் என்ஜின் பழுதால், கட்டப்பட்டிருந்த கயிறும் அறுபட்ட நிலையில் அது வடக்கு வாஞ்சூர் கடல் பகுதியில் கடல் சீற்றத்தால் தரைதட்டி ஒதுங்கியது. இதனை மீனவர்கள் விசைப்படகு உதவியுடன் இழுக்கும் முயற்சிகள் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை ஈடுபட்டும் முடியவில்லை.

இந்த நிலையில், பின்தொடர்ந்து வந்த சரக்கு ஏற்றிய மிதவைக் கப்பல் மற்றும் அதனை எம்.டி.ஜல்தாரா என்கிற இழுத்து வந்த இழுவைக் கப்பலும், வெள்ளிக்கிழமை அதிகாலை காரைக்கால் அரசலாறு முகத்துவாரம் அருகே தரைதட்டி கரை ஒதுங்கியது.

நடுக்கடலை கடந்து ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவை வந்ததாலேயே சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கிவிட்டதாக கூறப்படுகிறது. தரைதட்டிய இவ்விரு கப்பலையும், வடக்கு வாஞ்சூரில் தரைதட்டி நிற்கும் மிதவைக் கப்பலையும் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்ல கப்பல் நிறுவனத்தார் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

காரைக்கால் கடல் பகுதியில் 3 கப்பல்கள் தரைதட்டி நிற்கும் நிலையில், இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், நடுக்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் அவர்களது கப்பல் கேப்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இவர்கள், தரைதட்டி நிற்கும் கப்பல் நிறுவனத்தாருடன் தொடர்ந்து பேசிவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இக்கப்பலில் கழிவுப் பொருள்களாக எந்த பொருளும், எண்ணெய் போன்றவை இல்லையெனவும், இதனால் காரைக்கால் கடல் பகுதியில் இவை கொட்டப்படும்மென்ற அச்சமும் தேவையில்லையென காரைக்கால் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் அதிசக்தி வாய்ந்த இழுவைக் கப்பல்கள் இருந்தும், இவர்களது உதவியை தரைதட்டிய கப்பல் நிறுவனத்தார் நாடவில்லையெனவும், இதனால் நாங்கள் மீட்புப் பணியில் ஈடுபடவில்லையென காரைக்கால் துறைமுக நிர்வாகத் தரப்பினர் கூறுகின்றனர்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் அருகே தரைதட்டி நிற்கும் கப்பல்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →