காரைக்கால், பிப்.13: காரைக்காலில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டவர், முறையான சிகிச்சை அளிக்க யாருமின்றி மெத்தனமாக இருந்ததால் இறந்துவிட்டார் என்று கூறி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்கால் பெரியப்பேட்டைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், இவர் நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சரியான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இன்றி, அவர் இறந்துவிட்டார் என்று கூறி, உறவினர்கள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை முதல் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அரசலாறு பாலத்தருகே அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால், அங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த அதிகாரிகள் யாரும் இல்லாததால், பிரச்னை பெரிதாகிக் கொண்டே போயுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, காரைக்காலில் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகள், உயரதிகாரிகள் பலரும் விடுப்பில் செல்வதும், ஏனாம் பிரச்னையினைக் காரணம் காட்டி காவல்துறை அதிகாரிகள் அங்கே அனுப்பப் படுவதும் அதிகரித்துள்ளதால், காரைக்காலில் மொத்த மாவட்ட நிர்வாகமுமே ஸ்தம்பித்துள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
இது குறித்த தகவல்:
மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், துணை ஆட்சியர் என அதிகாரமிக்க அதிகாரிகள் அடிக்கடி குழுவாக விடுப்பில் சென்றுவிடுவதால், காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகத்தில் ஸ்தம்பிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது.
காரைக்கால் கடந்த 2005ஆம் ஆண்டு மாவட்ட அந்தஸ்து பெற்றுவிட்ட பிறகு மாவட்ட ஆட்சியர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர், உதவி ஆட்சியர், மாவட்ட துணை ஆட்சியர், பொதுப்பணித்துறையில் கண்காணிப்புப் பொறியாளர் என அதிகாரமிக்கவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளாக நியமனம் வேண்டுமென்ற காரைக்கால் மக்களின் கோரிக்கையேற்று, அந்த தகுதியை பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இன்னும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அதிகாரமிக்க உயரதிகாரிகள் நியமிக்கவேண்டுமென்ற கோரிக்கையும் கூறப்பட்டுவருகிறது.
பெரும்பாலான மக்கள் பிரச்னைகள், வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி கோருதல் உள்ளிட்டவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிலையிலேயே முடிக்கமுடியாமல் அதிகாரத் தகுதி அவருக்கு குறைத்தே வழங்கப்பட்டுள்ளதால், பல்வேறு கோப்புகள் புதுச்சேரிக்கு அனுப்பப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் நிலையிலேயே தீர்வு காணவேண்டிய கோப்புகள் தீர்வை கண்டுவிடுகிறது. காவல்துறையை பொருத்தமட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தீர்வுக்கு ஐ.பி.எஸ். முதுநிலைக் காவல் கண்காணிப்பாளரும், காவல் கண்காணிப்பாளரும் இணைந்து பணியாற்றிவிடுகின்றனர்.
ஆக, காரைக்காலை பொருத்தவரை குறைந்த அதிகாரமிக்கவர்களாக இருந்தாலும், இவர்கள் தொடர்ந்து பணியிலிருக்கவேண்டியது அவசியமாகிறது. கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியர் முதல் பல்வேறு நிலை உயரதிகாரிகள் விடுப்பில் செல்வது, அதுவும் கண்டிப்பாக பணியில் இருக்கவேண்டிய அவசியமுள்ள அதிகாரிகள் கூட்டாக விடுப்பில் சென்றுவிடுவது தொடர்ந்துகொண்டிக்கிறது.
மாவட்ட ஆட்சியர் பிராங்க்ளின் லால்தின்குமா பணியிடமாற்றம் பெற்றுவிட்டார். வேறு அதிகாரி பொறுப்பு ஏற்கும் வரை பணியில் நீடித்துவருவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி விடுப்பில் சென்றுவிடுவதால் மாவட்ட துணை ஆட்சியர் பொறுப்பு ஆட்சியராக நியமிக்கப்படுகிறார். திடீரென அவரும் விடுப்பில் போகும்போது, திருநள்ளாறு கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பு ஆட்சியராக நியமனம் செய்யபடுகிறார். இந்த நிலைதான் காரைக்காலில் வெள்ளிக்கிழமையும் ஏற்பட்டுள்ளது. இப்போது திருநள்ளாறு கோயில் அதிகாரி எஸ்.கே.பன்னீர்செல்வம் பொறுப்பு ஆட்சியராக பணியில் உள்ளார்.
மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிபபாளரான ஸ்ரீகாந்த், நீண்ட விடுப்பில் இருந்துவருகிறார். இவரது பணியிடத்துக்கு பொறுப்பு அதிகாரி நியமனம் இதுவரை இல்லை.
மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) ஆர்.சந்திரசேகரன் பணியாற்றிவந்தார். அவர் யேனம் பிராந்திய நிர்வாக அதிகாரியாக பணியிடமாற்றம் பெற்றுவிட்ட பிறகு, சார்பு ஆட்சியராக (வருவாய்) புதுச்சேரியில் பணியிலிருக்கும் முத்தம்மா என்பவர் காரைக்காலுக்கு நியமிக்கப்பட்டார். உத்தரவு வெளியாகி ஏறக்குறைய ஒரு வார காலமாகியும் அவர் பொறுப்பை ஏற்காததால், அந்த இடமும் காலியாகவே உள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாள் வெங்கடசாமி அண்மையில் விடுப்பில் இருந்தபோது புதுச்சேரியை சேர்ந்த மாவட்ட கண்காணி்ப்பாளர் மோனிகாபரத்வாஜ் காரைக்காலில் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றிச் சென்றார். பின்னர் வெங்கடசாமி பணியை ஏற்றார். இவர் வெள்ளிக்கிழமையன்று பணி நிமித்தம் புதுச்சேரிக்கு சென்றுவிட்டதால் அந்த இடமும் ஆய்வாளர் தகுதியில் உள்ளவர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பொதுப்பணித்துறையில் கண்காணிப்புப் பொறியாளர் தலைமை அதிகாரியாவும் அடுத்தபடியாக செயற்பொறியாளர்கள் உள்ளனர். அண்மையில் கண்காணிப்புப் பொறியாளர் கனகராஜ் பணி ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், அந்த பணியிடமும் காலியாகவே உள்ளது.
கடந்த பிப்.10 வெள்ளிக்கிழமையைப் பொருத்தவரை ஆட்சியர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் என யாருமே இல்லாத நிலை இருந்தது. இதுபோன்று குழுவாக விடுப்பில் செல்வது அடிக்கடி நிகழ்வதை குறிப்பிடும் சமூக ஆர்வலர்கள், காரைக்காலில் வளர்ச்சிப் பணிகள் இதனால் ஸ்தம்பிப்பதாகவும், காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்பட்சத்தில் அது கட்டுக்குள் வரமுடியாமல் போக வாய்ப்பு உண்டாகிவிடும் என கூறுகின்றனர்.
புதுச்சேரியிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரைக்காலில் வளர்ச்சித் திட்டங்களுக்கும், காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்பட்சத்திலும் புதுச்சேரி நிர்வாகத்தினரால் உடனடி தீர்வு கண்டுவிடமுடியாது. எனவே வரும் காலங்களில் இதுபோன்று கொத்தாக விடுப்பில் செல்லும் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்காமல் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது அதே நிலை தகுதியுடையவர்கள் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படவேண்டும். ஒரு முடிவு எடுக்கமுடியாத நிலை தோன்றிவிடாமல், தகுதியானவர்கள் தலைமைப் பணியில் இருக்கவேண்டும். இதனை புதுச்சேரி தலைமைச் செயலர் கவனத்தில்கொண்டு செயலாற்றிடவேண்டுமென பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.