காரைக்காலில் மாங்கனித் திருவிழா: பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து பக்தர்கள் வழிபாடு
காரைக்கால், ஜூலை 3 : காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற பிச்சாண்டவர் வீதியுலாவின்போது, பக்தர்கள் மாங்கனிகள் இறைத்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வ
காரைக்கால், ஜூலை 3 : காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற பிச்சாண்டவர் வீதியுலாவின்போது, பக்தர்கள் மாங்கனிகள் இறைத்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. சிவபக்தராக இருந்து வாழ்ந்த காலம், பரமதத்தரை மணம் முடித்தது, கணவரே தம் பாதத்தில் வீழ்ந்து வணங்கியதை ஏற்கமுடியாமல், பேய் உருவம் பூண்டு இறைவன் வீற்றிருக்கும் கயிலாயத்தை காலால் நடந்து செல்வது ஆகாதென்றெண்ணி தலைக்கீழாக கைகளை ஊன்றி சிவபெருமானை கண்டார் புனிதவதியார். இவரின் பக்தியை பாராட்டும் வகையில் தாய், தந்தையரற்ற இறைவன் (சிவபெருமான்) அம்மையே என்றழைத்தார். இவ்வாறு பெருமைகொண்ட அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்காலில் அருள்மிகு கைலாசநாதர் கோவில் சார்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு 1-ம் தேதி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் இருந்து இரவு பரமதத்தர் (மாப்பிள்ளை) அம்மையார் கோவியிலுக்கு அழைத்துவரப்பட்டார். 2-ம் தேதி காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உத்சவம் நடைபெற்று, மாலை பரமதத்தரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் வீட்டுக்கு உணவு சாப்பிட செல்லும் நிகழ்ச்சியை விளக்கும் வகையில், கையில் மாங்கனியுடன் பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் காலை 9 மணிக்கு வீதியுலா புறப்பாடு தொடங்கியது. முன்னதாக பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா கொண்டு செல்லப்பட்டார் பிச்சாண்டவர்.
சப்பரம் புறப்பாடு தொடங்கியது முதல் ஒவ்வொரு வீடுகள், கட்டடங்களின் மேல் நின்றவாறு மக்கள், பக்தர்களை நோக்கி மாங்கனிகளை இறைத்தனர். பல்வேறு வேண்டுதல் செய்துகொண்டவர்கள், இறைக்கப்படும் மாங்கனியை பிடித்து பத்திரமாக வீட்டுக்கு கொண்டுசென்றனர். பக்தர்களில் சிலர் வலை தயாரித்து அதன் மூலம் மாங்கனிகளை பிடித்தனர். நேர்த்திக்கடனாகவும் பக்தர்கள் மாங்கனிகளை இறைத்தனர். சப்பரத்தின் முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்ல, பிச்சாண்டவர் சப்பரம் பக்தர்கள் மத்தியில் மிதந்தவாறு சென்றது.
காரைக்கால் நகரின் பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதாகோவில் வீதி, லெமேர் வீதி வழியாக பவழக்கால் சப்பரம் மாலை அம்மையார் கோவிலை நெருங்கியது. அப்போது புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்துச் சென்று மாங்கனியுடன் அமுது படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு ஒரு நாள் (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
திருவிழாவையொட்டி காரைக்கால் நகரெங்கும் பரவலாக பக்தர்கள் கூட்டம் இருந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி (கோவில்கள்) எஸ்.கே.பன்னீர்செல்வம், கைலாசநாதர் கோவில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு்த்தப்பட்டிருந்தனர்.
வெளியூரில் இருந்து மாங்கனி வரத்து: பிரசித்திப் பெற்ற மாங்கனித் திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்த விலை முதல் விலை உயர்ந்த மாங்கனிகள் பலவும் கடந்த சில நாள்களாக காரைக்கால் நகருக்கு வியாபாரிகள் கொண்டுவந்து விற்கத் தொடங்கினர். மாங்கனி இறைப்பதற்காகவும், விருந்தினர்களுக்கு விருந்து உபசரிப்பின்போது வைக்கவும் ஏராளமானோர் மாங்கனிகளை வாங்கிச் சென்றனர்.