துபாயில் உள்ள தமிழக மீனவர்கள் நிலைமையை ஆராயக் குழு: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 18: துபாயில் உள்ள தமிழக மீனவர்கள் நிலைமையை ஆராயக் தமிழக அரசு சார்பில் தூதுக்குழு ஒன்று அனுப்ப வேண்டும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, ஜூலை 18: துபாயில் உள்ள தமிழக மீனவர்கள் நிலைமையை ஆராயக் தமிழக அரசு சார்பில் தூதுக்குழு ஒன்று அனுப்ப வேண்டும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கொன்று குவிக்கிறது. இப்போது பல்வேறு கடற்பகுதிகளிலும் தமிழக மீனவர்கள் சுடப்படும் நிகழ்வுகள் அதிர்ச்சி தருகின்றன.
ஏற்கெனவே கொச்சி கடல் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் கேரளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் இத்தாலிய கப்பலின் பாதுகாப்பு படையினர் சுட்டு இறந்து போயினர்.
இத்தாலிய கப்பல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு நஷ்ட ஈடு பெற்று உடனடியாக தந்தது. இத்தாலிய கப்பலும் முடக்கப்பட்டது. வழக்கும் நடைபெற்று வருகிறது.
அதைப்போல இப்போதும் துபாய் கடல் பகுதியில் உயிரிழந்த சேகரின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்த மற்ற மூவருக்கும் அமெரிக்க கடற்படையிடமிருந்து உரிய நஷ்ட ஈடு பெற்றுக்கொடுக்க இந்திய அரசு முன் வரவேண்டும்.
இந்த பிரச்னை தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பதை வரவேற்கிறேன். இதோடு தமிழக அமைச்சர் ஒருவர் தலைமையில் ஒரு குழுவை துபாய்க்கு அனுப்பி அங்கு மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் நிலை குறித்து ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கச் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையின்படி துபாயில் வாழும் தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ராமதாஸ்: இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
இந்திய கடல் எல்லையில் மட்டுமின்றி, வெளிநாட்டு கடல் எல்லையிலும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது மிகவும் கவலை அளிக்கிறது.
மீனவர் சேகரை சுட்டுக் கொன்ற அமெரிக்க படையினரை கைது செய்து விசாரிக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட மீனவர் சேகரின் குடும்பத்துக்கு ரூ.5 கோடி இழப்பீட்டையும், இந்தத் தாக்குதலில் காயமைடந்த மேலும் 3 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.2 கோடியும் இழப்பீடு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகரின் உடலை அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு வரவும் காயம் அடைந்த 3 மீனவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து சிறப்பான மருத்துவம் அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.