குரூப் 2 தேர்வு வெளியான விவகாரம்: ஒடிசா வழக்குரைஞர் கைது
குரூப் 2 தேர்வு வெளியான விவகாரம் தொடர்பாக முக்கிய எதிரியான ஒடிசாவை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
குரூப் 2 தேர்வு வெளியான விவகாரம் தொடர்பாக முக்கிய எதிரியான ஒடிசாவை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஆக.11-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள ஓர் மையத்தில் கேள்வித்தாளின் நகலை கையில் வைத்திருந்ததாக பவானியை சேர்ந்த இளம்பெண் அவரது கணவர் உள்பட இதுவரை 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த தியாகராஜன், செந்தில்குமார், ஸ்ரீதர்ராஜ் (எ) பாலன் ஆகியோர் மூலம்தான் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கேள்வித்தாள் வெளியானது என்பது உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்தில் இவ்வழக்கை ஈரோடு நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் ஆந்திராவை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஆனந்தராவ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை ஈரோடு போலீஸார் செப்டம்பர் மாதத்தில் கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் ஒடிசாவை சேர்ந்த ககூன் என்பவருக்கு தொடர்பு இருப்பதும் அவர்தான் முக்கிய எதிரி என்பதும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் ஒரு மாதமாக ககூனை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு ககூன் வர இருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பெருந்துறையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிபிசிஐடி போலீஸார், ககூனை பெருந்துறையில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது முழுபெயர் ககூன் சேனாதி பிகாரி (49) என்பதும், ஒடிசாவில் சிவில் வழக்குரைஞராக அவர் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
ஒடிசாவில் உள்ள ஒரு அச்சகத்தில் பணியாற்றி வந்த புவனேஸ்வரை சேர்ந்த கோத்ரா மோகன் மந்தனிடம் இருந்து ககூன் கேள்வித்தாளை பெற்றதும், தனது நண்பரான ஆனந்தராவ் மூலம் தமிழகத்தில் கேள்வித்தாளை பல லட்சத்துக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கூகூனை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ககூன், பெருந்துறை சார்புநீதிமன்றத்தில் நீதிபதி எம்.ரவி முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் ஈரோடு கிளை சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கோத்ரா மோகன் மந்தனை போலீஸார் தேடி வருகின்றனர்.