கடலூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை
சபரிமலை சீசனை முன்னிட்டு கடலூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபரிமலை சீசனை முன்னிட்டு கடலூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. நவ.16-ம் தேதி முதல் மண்டல பூஜை வழிபாடு தொடங்கி தொடர்ந்து 41 நாள்கள் நடைபெறுகிறது. டிச.26-ம் தேதி ஸ்ரீஐயப்பனுக்கு மண்டலாபிஷேக நிறைவு பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே போன்று விழுப்புரம், கடலூர் மாவட்ட ஐயப்ப பக்தர்கள் பயன்பெறும் வகையில் கடலூரிலிருந்து விருத்தாசலம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்றும், இதனால் பக்தர்கள் எவ்வித போக்குவரத்து நெருக்கடி இன்றி சபரிமலை செல்லுவதற்கு வசதியாக இருக்கும் என நெய்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சகாதேவன் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தற்போது சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை இயக்கப்பட்டு வரும் ரயிலை கடலூர் வரை நீட்டித்தால் கடலூர் மாவட்டம் மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என எஸ்.சகாதேவன் தெரிவித்துள்ளார்.
Advertisement