சென்னைக்கு நிகராக கொங்கு மண்டலத்துக்கும் மின்வெட்டு அமல்: கொமுக ஈஸ்வரன் வேண்டுகோள்
சென்னைக்கு நிகராக கொங்கு மண்டலத்துக்கும் மின் வெட்டு இருக்க வேண்டும் என்று கொங்கு
சென்னைக்கு இணையாக கொங்கு மண்டலத்திலும் மின்வெட்டை அமல்படுத்தக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கொங்குநாடு முன்னேற்றக்கழகம் (கொமுக) பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் 16 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது அமல்படுத்தப்படும் மின்வெட்டு இன்னும் 6 மாதங்களுக்குள் தீர்ந்துவிடும் என்று அதிகாரிகள் கூறினாலும், தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை.
1993-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்தாலும் இதுவரை ஒரு யூனிட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை. மேட்டூர், வடசென்னை, வல்லூர் ஆகிய அனல்மின்நிலையங்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டாலும் இதுவரை உற்பத்தி தொடங்கப்படவில்லை.
தமிழகத்தில் தொழில்வளமிக்க கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் 16 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
தமிழக அரசுக்கு வணிகவரி மூலம் வரும் மொத்த வருவாயில் 50 சதவீதம் கொங்கு மண்டலத்தில் இருந்து தான் கிடைக்கிறது. 50 சதவீத வருவாயை வழங்கும் கொங்கு மண்டலத்தில் 16 மணி நேர மி்ன்வெட்டு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வடமாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், கொங்கு மண்டலத்தை நம்பிதான் உள்ளனர். எனவே, சென்னை, கொங்கு மண்டல மாவட்டங்களில் சமமாக 5 மணி நேர மின்வெட்டை அமல்படுத்த வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும். ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் தலைநகரில் தொழில்அமைப்புகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
பேட்டியின்போது கட்சியின் மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலு, மாவட்டச்செயலர்கள் துரைராஜா (வடக்கு), எம்.ஈஸ்வரமூர்த்தி (மாநகரம்), எஸ்.ஜெகநாதன் (தெற்கு) ஆகியோர் உடன் இருந்தனர்.