வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: உதவிஆட்சியர் திறந்து வைத்தார்
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியிலிருந்து வேளாண் பாசனத்திற்கு உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் இன்று தண்ணீர் திறந்து விட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியிலிருந்து வேளாண் பாசனத்திற்கு உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் இன்று தண்ணீர் திறந்து விட்டார்.
மேட்டூர் அணையில் கடந்த செப்.17-ம் தேதி பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து செப்.21-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் செப்.25-ம் தேதி கீழணை வந்தடைந்தது. கீழணையிலிருந்து செப்.30-ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கீழணையிலிருந்து வடவாறு மூலம் வீராணம்ஏரிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரை படிப்படியாக தேக்கி வைக்கப்பட்டு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரரத்னூ உத்தரவின்பேரில் நவ.17-ம் தேதி சனிக்கிழமை உதவிஆட்சியர் எல.சுப்பிரமணியன் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவிக்கையில் ஏரியிலிருந்து வீராணம் புதிய மதகு வழியாக 100 கனஅடியும், ராதா வாய்காகால் மதகு வழியாக 10 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஏரியில் உள்ள 34 மதகுகளும் திறக்கப்பட்டு மொத்தம் 500 கனஅடி நீர் பாசனத்திற்கு வழங்கப்படும். இதனை மூலம் 44856 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். அவ்வப்போது பாசன வசதிக்கேற்பு தண்ணீர் அளவு மாற்றி அமைக்கப்பட்டு வாய்க்காலில் தொடர்ந்து வழங்கப்படும் என உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Advertisement
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் க.தனசிங் (சிதம்பரம்), தில்லைகோவிந்தன் (காட்டுமன்னார்கோயில்), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் ச.ராமமூர்த்தி (சிதம்பரம்), இ.வீரமணி (அணைக்கரை), உதவிப் பொறியாளர்கள் சு.உமா (வீராணம்), கோ.குணசேகரன், பொறியாளர் கு.புகழேந்தி, விவசாய சங்க பிரதிநிதிகள் பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், விஜயகுமார், ரங்கநாயகி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீர்போதுமானதல்ல: விவசாயிகள்
வீராணம்ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது குறித்து உழவர் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: வீராணம் ஏரியில் உள்ள நீர்மட்டம் பாசனத்திற்கு போதுமானதல்ல. மழை நீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு கூடுதலாக நீர் திறந்துவிட வேண்டும். இந்த நீர் கடை, மடை பகுதிகளுக்கு சென்றடையாது. எனவே கல்லணையிலிருந்து கூடுதலாக நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுப்பெற்று கடலூர் மாவட்டம் காவிரி டெல்டா கடை, மடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பாசனத்திற்கு கூடுதலாக நீரை வழங்க வேண்டும் என்றார் பி.ரவீந்திரன்.
நாரைக்கால் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தது: வீராணம்ஏரியிலிருந்து சம்பிரதாயத்திற்கு நீர் திறக்கும் சடங்காக உள்ளது. மழை நீரை நம்பி இப்பகுதி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொண்டுள்ளனர். டெல்டா பகுதிகளுக்கு போதுமான நீர் கிடைக்கவில்லை. எனவே மேட்டுரிலிருந்து கூடுதலாக நீர் திறந்துவிட வேண்டும். கீழணையிலிருந்து வடவாறு வழியாக 2500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்றார் கே.வி.இளங்கீரன்.