பொன்முடி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
சனிக்கிழமை இன்று மதியம் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக மாலை 6.15 மணி அளவில் அழைத்து வரப்பட்டார். சிறையில் அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்தனர். அதுவரை சுமார் அரை மணி நேரம் கடலூர் மத்தியச் சிறை வளாகத்தில் அமர்ந்திருந்தார். அவரைக் காண விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். அவர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் மாலை 6.45 மணி அளவில் அவர் சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
பொன்முடி சிறையில் அடைக்கப்படுவதைத் தொடர்ந்து, கடலூர் சிறை வளாகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.