முகப்பு
தற்போதைய செய்திகள்

மணமான மறுநாளே தம்பதி கடத்தல்: பஞ்சாயத்து பேசியவர்கள் கடத்தியதாக புகார்

திருமணமான மறுநாளில் புதுமணத் தம்பதியினர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

திருமணமான மறுநாளில் புதுமணத் தம்பதியினர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 திருமணத்தின்போது பஞ்சாயத்து பேசியவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக புதுமணத்தம்பதியினரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 தருமபுரி மாவட்டம் அரூர் அருகே செங்கலஏரியை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி சுந்தரி. இத்தம்பதியினரின் மகன் சிவா (24). இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 
ஈரோடு அருகே வீரப்பன்சத்திரத்தில் வசித்து வருகின்றனர். திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஓட்டுநராக சிவா பணியாற்றி வருகிறார்.
 சிவாவுக்கும், அதே தெருவில் வசித்து வரும் ஆயிசா (21) ஆகியோருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம். இதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். முதலில் எதிர்ப்பு தெரிவித்த இரு குடும்பத்தினரும் பின்னர் சம்மதித்தனர். இருதரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கும்போது சிவா-ஆயிசாவுக்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து சம்மதிக்க வைத்தார்களாம்.
 இந்நிலையில், சிவா-ஆயிசா திருமணம் ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் உள்ள கோவிலில் இந்து முறைபடி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புதுமணத்தம்பதியினரை திருப்பூரில் தனிக்குடித்தம் வைப்பதற்காக இருதரப்பினரின் உறவினர்களும் காரில் அழைத்துச்சென்றார்களாம்.
 அப்போது பெருந்துறை அருகே சென்றுகொண்டிருந்தபோது, செல்போனில் இக்குடும்பத்தினரை தொடர்புகொண்ட சிலர் காரில் இருந்த புதுமணத்தம்பதியினரை வேறொரு காரில் கடத்திவிட்டு தப்பிவிட்டார்களாம்.
 இது குறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதுமணத்தம்பதியினரின் உறவினர்கள் புகார் செய்தனர். கண்காணிப்பாளர் இரா.பொன்னியின் உத்தரவுபடி இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 திருமணம் முடிந்த மறுநாளே புதுமணத் தம்பதியினர் கடத்தப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.