இளையான்குடி திமுக எம்.எல்.ஏ வெற்றி ரத்து: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை
மானாமதுரை, செப்.5: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ சுப.மதியரசன் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிம
மானாமதுரை, செப்.5: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ சுப.மதியரசன் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது. இளையான்குடி சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட இக் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன் வெற்றி பெற்றார்.
தற்போது இத் தொகுதி மானாமதுரை தொகுதியுடன் இணைக்கப்பட்டு விட்டது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் இத் தேர்தலில் போட்டியிட்ட கலைமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதியரசன் வெற்றியை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி வழக்கு தாக்கல் செய்தார். இவர் தனது மனுவில் தனது வேட்புமனுவில் பிழை இருந்ததாகக்கூறி தேர்தல் அதிகாரி எனது மனுவை நிராகரித்து விட்டார். தான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன். எனவே மதியரசன் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் கலைமணியின் மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தது தவறு என்றும் மதியரசன் வெற்றி செல்லாது எனவும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மதியரசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தனது மனுவில் எனது வெற்றிக்கு எதிராக கூறப்பட்டுள்ள தீர்ப்பில் உயர்நீதிமன்றம் சட்டவிதிகளின் எல்லையை கடந்து செயல்பட்டுள்ளது எனவே அதன் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மதியரசனின் வெற்றி செல்லாது என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் வேட்பாளர் கலைமணிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.