சிதம்பரத்தில் மூதாட்டியை தாக்கி நகைகள் கொள்ளை: இளைஞர் கைது, நகைகள் மீட்பு
சிதம்பரம் நகரில் நேற்று(வியாழக்கிழமை) பட்டப்பகலில் மர்மஆசாமிகள் இருவர் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி பத்மாவதி முகத்தில் தலையணை வைத்து, வாயில் துணியை
சிதம்பரம் நகரில் நேற்று(வியாழக்கிழமை) பட்டப்பகலில் மர்மஆசாமிகள் இருவர் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி பத்மாவதி முகத்தில் தலையணை வைத்து, வாயில் துணியை வைத்து அடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இளைஞர் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை போலீஸார் மீட்டனர்.
சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில் தெருவில் வசிப்பவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நரசிம்மலுநாயுடு (85). இவரும் மனைவி பத்மாவதி (82) ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவரது மகன் ரமேஷ் புதுச்சேரியில் ரிசார்ட்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய மகன் ரமேஷ் அனுப்பியதாக இருவர் வீட்டிற்குள் நுழைந்தனர். நரசிம்மலு ஒருவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மற்றொருவன் வீட்டில் இருந்த மூதாட்டி பத்மாவதி அம்மாள் முகத்தில் தலையணை வைத்து அழுத்தியும், வாயில் துணியை வைத்து அடைத்து 22 பவுன்கள் மதிப்பிலான அவரது கழுத்திலிருந்த தாலி செயின், டாலர் செயின், வளையல்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, மாடியிலிருந்து வந்த மற்றொருவனுடன் தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து நரசிம்மலு கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூதாட்சி பத்மாவதி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வழக்கில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு சிதம்பரம் ஓமக்குளம் தச்சன்தெருவைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமாரை (22) கைது செய்தனர். மேலும் அந்த இளைஞர் கொடுத்த தகவலின் பேரில் சிதம்பரம் புறவழிச்சாலையில் குப்பைகளோடு பதுக்கி வைத்திருந்த பதினெட்டரை பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர்