தற்போதைய செய்திகள்

பொய் வழக்கு போடுவதாகக் கூறி காவல் நிலையத்துக்கு பூட்டு: பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது

வீராணம் அருகேயுள்ள தாதனூரில் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. அதில் 28-ம் தேதி நடைபெற்ற கரக ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு

க. தங்கராஜா

சேலம் மாவட்டம் வீராணத்தில் போலீஸார் பொய் வழக்கு தொடருவதாகக் கூறி பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 20 பேர்  கைது செய்யப்பட்டனர்.

வீராணம் அருகேயுள்ள தாதனூரில் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. அதில் 28-ம் தேதி நடைபெற்ற கரக ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அழகரசன் (24) என்பவர் அளித்த புகாரின் பேரில் வீராணம் போலீஸார், யுவராஜ் (24), சுபாஷ் (28), பாரதி (23) அண்ணாமலை (42) ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்களை கைது செய்த போலீஸார், காவல் நிலையத்தில் வைத்து அவர்களை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரும் தங்களுக்கு மருத்துவ உதவி அளிக்கக் கோரி சேலம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும்படி கடந்த 2-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் காவல்துறை மீதே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் கோபமடைந்திருந்த வீராணம் போலீஸார், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 4 பேர்களின் உறவினர்கள் சிலரை பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.இதனால் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி தாதனூர் பொதுமக்கள், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், பகத்சிங் இளைஞர் பாசறை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் காவல் நிலையத்துக்கு அவர்கள் பூட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் எஸ்.பி. அஸ்வின் எம்.கோட்னீஸ், ஏ.எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் வீராணம் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். காவலர்கள் உதவியால் பூட்டு உடைக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆகிய 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து காவல் நிலையம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குடியுரிமை பாதுகாப்பு நடுவம் அமைப்பின் நிர்வாகி வழக்குரைஞர் ஜி.ஹரிபாபு, பகத்சிங் இளைஞர் பாசறையின் நிர்வாகிகள் தங்கவேல், சிவமணி, குமரவேல் உள்ளிட்ட 20 பேர்களை, வீராணம் இன்ஸ்பெக்டர் மா.சண்முகம் கைது செய்தார். அவர்களில் 4 பேர் பெண்கள்.கைதானவர்கள் மீது போலீஸாரை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அனைவரும் சேலம் 4-வது நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியிருப்பதாகவும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடும்படியும் கைதானவர் தரப்பில் இருந்து நீதிபதியிடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வீராணம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சாராய விற்பனை, காவல் நிலையத்தில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பகத்சிங் இளைஞர் பாசறை அமைப்பினர் சுவரொட்டிகளை ஒட்டி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT