பண்பொழி திருமலைக்கோவில்: ரூ. 1 கோடியில் தங்கத் தேர் பணிகள்
கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோவிலில் ரூ. 1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தங்கத் தேர் பணிகளை ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்யும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோவிலில் ரூ. 1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தங்கத் தேர் பணிகளை ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்யும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான திருமலைக் கோவிலில் குமரனாக எழுந்தருளியுள்ள முருகனை தரிசிக்க சில நூறு படிக்கட்டுக்கள் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர்.படிக்கட்டுக்களில் ஏற முடியாத பக்தர்கள் மலை மீது எழுந்தருளியுள்ள முருகனை தரிசிக்க முடியாமல் வேதனையுற்று வந்தனர்.
இந்நிலையில்,ரூ. 5 கோடிக்கும் அதிகமான செலவில் மலைப்பாதை அமைக்ப்பட்டு முருக பக்தர்கள் மலைப்பாதை வழியே சென்று முருகனை தரிசித்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து ரூ. 1 கோடி மதிப்பீட்டில் தங்கத் தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதற்கான பணியினை தேர் திருப்பணிக்குழுத் தலைவர் அருணாசலம் செட்டியார் உள்ளிட்ட உபயதாரர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.
மரச்சட்டங்களால் தேர் உருவாக்கப்பட்ட நிலையில் தங்கத்தேர் நிறுத்துவதற்கான பாதுகாப்பு அறை கட்டப்படாததால்,மரச்சட்ட தேரில் தங்கத்தகடுகள் பொருத்தும் பணி சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன, இந்நிலையில் ரூ. 15 லட்சத்தில் தங்கத் தேர் ஓடுதளமும்,ரூ. 10 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் பாதுகாப்பு அறை கட்டும் பணியும் நிறைவு பெற்றுள்ளன.
இதனையடுத்து மரச்சட்ட தேரில் தங்கத்தகடுகள் பொருத்தும் பணி தொடங்கப்படவுள்ளது எனவும் இப்பணியினை ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தங்கத்தேர் திருப்பணிக்குழுத் தலைவர் அருணாசலம் தெரிவித்தார்.