டி.ஆர்.ஓ வாகன ஓட்டுநர் கொலை: சாக்கு பையில் கட்டி கிணற்றில் வீசிய சடலம் மீட்பு
விருதுநகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவர் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரின் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மார்ச்-13ம் தேதி பணிக்குச் செல்வதாக அவரது மனைவியிடம்
விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் வாகன ஓட்டுநரை கடத்தி கொலை செய்து, சாக்கு பையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட சடலத்தை அழுகிய நிலையில் போலீஸார் மீட்டனர். மேலும், காணமால் போன ஒரு மாதம் கழித்து துப்பு துலங்கியுள்ளதால் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவர் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரின் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மார்ச்-13ம் தேதி பணிக்குச் செல்வதாக அவரது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதற்கடுத்து பல்வேறு இடங்களிலும், உறவினர் வீடுகளிலும் தேடியும் எங்கும் தகவல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கடந்த மாதம் 15-ம் தேதி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் அவரது மனைவி திருச்செல்வி புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்து காணமல் போன மனோகரனை போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். பின்னர் அவரது செல்பேசியில் காணமல் போகும் முதல் நாள் 34 பேரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரியவந்தது. அதில், கடைசியாக அவரது குடியிருப்பு பகுதியில் உள்ள பாண்டியம்மாளிடம் பேசியுள்ளது தெரியவந்தது. அதையடுத்து, அவர் வசித்த பகுதியில் உள்ளவர்களிடமும், அங்கு கடை நடத்தி ஆறுமுகம், அவரது மனைவி பாண்டியம்மாளிடமும் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து இருவரும் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது போலீஸாருக்கு திருப்பமாக அமைந்ததால் தீவிரமாக விசாரணை செய்யத் தொடங்கினார்கள். இதற்கிடையே திருச்செல்வி கணவரை கண்டுபிடித்து தரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஏப்.9 தேதி தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் வருகிற ஏப்-25ம் தேதிக்குள் கண்டுபிடித்து தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவி்ட்டது.
Advertisement
இதையடுத்து போலீஸார் விசாரணை செய்து வந்த நிலையில் மனோகரனின் இரு சக்கர வாகனம் சிவரக்கோட்டை அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரத்தக்கறையுடன் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகத்தின் தம்பி செல்வத்தை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, மனோகரனை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சடலத்தை சாக்கு பையில் கட்டி கள்ளிக்குடி கால்நடை மருத்துவமனை அருகே கண்மாய் கிணறு பகுதியில் வீசியிருப்பது குறித்து விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அக்குறிப்பிட்ட பகுதியில் உள்ள கிணற்றுப்பகுதிக்குள் சென்று பார்த்த போது சாக்கு பையில் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து மனோகரனின் உறவினர்கள் அடையாளம் காட்டிய பின்னரே போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.