குடித்து விட்டு அம்மாவை அடிக்கும் அப்பா மீது நடவடிக்கை எடுங்க: ஆட்சியரிடம் சிறுமி மனு
எங்க அம்மாவை அப்பா எப்போதும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார். அவருக்கு பாதுகாப்பு இல்லை. எங்க அப்பா மீது ஏதாவது நடவடிக்கை எடுங்க- இப்படி 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி மாவட்ட ஆட்சியரிடம்...
எங்க அம்மாவை அப்பா எப்போதும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார். அவருக்கு பாதுகாப்பு இல்லை. எங்க அப்பா மீது ஏதாவது நடவடிக்கை எடுங்க- இப்படி 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் எழுதி, மனுவாக அளித்துள்ளார்.
சேலத்தை அடுத்த குப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு பௌமிகா(12) என்ற 7ம் வகுப்பு படிக்கும் மகள், மற்றும் 11 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பௌமிகா மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றினை அளித்தார். அதில்,
Advertisement
"குடிப் பழக்கம் உள்ள என் அப்பா, அடிக்கடி வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார். அவர் அம்மாவை அதிகம் அடிக்கிறார். போன புதன்கிழமை எல்லாரையும் அடித்து விட்டு இரும்புக் கம்பியால் என் அம்மாவை அடித்து, வீட்டுக்குள் போட்டு பூட்டி விட்டுச் சென்றார். பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் அம்மாவை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். எங்க அம்மாவுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே என் அப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்டு வாசித்துப் பார்த்த ஆட்சியர் மகரபூஷணம், உடனடியாக இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், மேலும், காவல் கண்காணிப்பாளரிடமும் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினார்.