பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய, தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 19-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷூக்கு மாநில பாஜக சார்பில் சேலத்தில் வியாழக்கிழமை நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அத்வானி, மறைந்த ரமேஷின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் பேசியது:
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் தேசத்தின் ஒருமைப்பாடுக்காக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்ல பெயர் எடுத்த சிறந்த மனிதர். எதிரிகளே இல்லாத அஜாதசத்ருவைப் போன்ற ரமேஷூக்கு இப்படி ஒரு துயரமான முடிவு ஏற்படும் என்று யாரும் எண்ணிப் பார்க்கவில்லை.
யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத அவரை என்ன காரணத்துக்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. மதிப்புமிக்க, நேர்மையான மனிதரான ஆடிட்டர் ரமேஷ், ஒரு தேச பக்தர் என்பதாலேயே கொல்லப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்.
ரமேஷின் படுகொலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் அனைத்துக் கட்சியினரும் கண்டனமும் இரங்கலும் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திரண்டு வந்துள்ள சேலம் மக்களுக்கும், மறைவின்போது கடையடைப்பு செய்து இரங்கல் தெரிவித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமேஷின் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதை பாஜக வரவேற்கிறது. ஆனால் குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தால்தான் முதல்வரின் நோக்கம் வெற்றி பெற்றதாக அமையும். ஜெயலலிதா தொடர்ந்து தனி கவனம் செலுத்தி கொலையாளிகளைப் பிடித்தால் மட்டுமே பாஜக திருப்தி அடையும்.
கோவை குண்டு வெடிப்பு நடைபெற்ற 1998, பிப்ரவரி 14-ம் தேதியை எப்படி எனக்கு மறக்க முடியாத நாளாக மாறியதோ அதேபோல் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்ட ஜூலை 19-ம் தேதியும் என்னால் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்ட ஜன சங்கத்தின் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி, பொதுச் செயலர் தீனதயாள் உபாத்யாய் போன்றோரை நாங்கள் ஏற்கெனவே இதேபோல் இழந்துள்ளோம்.
தமிழகத்தில் டாக்டர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் போன்றவர்களும் அண்மையில் தொடர்ச்சியாக கொல்லப்பட்டுள்ளனர். பாஜகவால் இனியும் இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதிலும் நாட்டுக்காக தியாகம் செய்யும் தேச பக்தர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற தேச விரோதிகளின் இரக்கமற்ற செயல்பாடுகளை நாட்டை ஆள்பவர்கள் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அடுத்த சில மாதங்களில் பல மாநிலங்களில் பேரவைத் தேர்தலும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றதில் இருந்து நாட்டில் ஊழலும், பண வீக்கமும் மட்டுமே முக்கிய விஷயங்களாக பேசப்படுகின்றன.
பாஜகவிடம் நரேந்திர மோதி, சிவராஜ் சிங் செüகான், ரமன்சிங் போன்ற சிறந்த முதலமைச்சர்கள் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளிடம் இதுபோன்ற செல்வாக்கு மிகுந்த முதல்வர்கள் யாரேனும் உள்ளனரா நாட்டு மக்கள் தங்களுக்கு சிறந்த அரசை, நேர்மையான அரசை யார் கொடுக்க முடியும் என்று சிந்தித்து வருகின்றனர். அதனால் அடுத்து வரக்கூடிய தேர்தல் முடிவுகள் இதுவரை பார்த்திராத வகையில் இருக்கும்.
ஊழல், பயங்கரவாதம் என்ற இரண்டு தீய சக்திகளையும் பாஜக எப்போதும் சகித்துக் கொள்ளவோ சமரசம் செய்து கொள்ளவோ மாட்டாது. எனவே நாட்டைக் காக்கும் பொறுப்பை மக்கள் பாஜகவிடம் அளிப்பார்கள் என்றார் அத்வானி.
பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதரராவ், தேசிய செயலர் தமிழிசை செüந்திரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், லலிதா குமாரமங்கலம், மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மறைந்த ஆடிட்டர் ரமேஷூக்கு மெüன அஞ்சலி செலுத்தினர்.
அத்வானி வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.