காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் சார்பில் பொதுப்பணித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து வினாடிக்கு 1.35 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 1.15 லட்சம் கன அடியைத் தாண்டியுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 1.20 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அளவானது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இது மாலைக்குள் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. எனவே காவிரிக் கரையின் இருபுறங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.காவிரியில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிப்பு வழங்கியிருப்பதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.