ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சேலத்துக்கு இன்று வந்த இல.கணேசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி நாட்டின் எல்லையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. நாடு துண்டாடப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகள் சீனா, பாகிஸ்தான் நாடுகளால் ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதற்கும் காங்கிரஸ் தலைவர்கள்தான் காரணம். அந்த நிலை இப்போதும் தொடருகிறது. இந்தியாவில் இப்போது உள்ள பகுதிகளையும் காக்க அக்கட்சி தவறி வருகிறது. தேச விரோதிகளுக்கு ஆதரவாகப் பேசுவதை காங்கிரஸ் கட்சி தனது கொள்கையாகவே மாற்றிக் கொண்டுவிட்டது.
ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருப்பது ஒரு தவறான முன் உதாரணமாகியுள்ளது. இது தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கு எதிரான நிலை. கிறிஸ்தவராக மாறிய ஹிந்து தாழ்த்தப்பட்டோருக்கு சலுகை கேட்பது ஆபத்தானது. மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், வாக்கு வங்கியை மனதில் வைத்து இந்த கோரிக்கை எழுப்பப்பட்டிருப்பதாக கருதுகிறேன். எனவே தனது நிலைப்பாடு குறித்து தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆடிட்டர் ரமேஷ் கொலையாளிகளை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 10 நாள்களாகிறது. புலனாய்வுக் குழு அதிகாரி மஞ்சுநாத்தும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். குற்றவாளிகள் மட்டும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் தமிழக அரசு மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.ஆடிட்டர் ரமேஷ் கொலையைத் தொடர்ந்து பாஜக தலைவர்களுக்கு கடிதங்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. எனக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதை புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டோம். விசாரணையை திசைத் திருப்பும் நோக்கில் கூட இவை அனுப்பப்பட்டிருக்கலாம்.
தமிழகத்துக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் மோடி ஆகியோர் விரைவில் வர உள்ளனர். அவர்கள் எந்த ஊருக்கு எப்போது வருகின்றனர் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் கூட்டணி அமைத்தே போட்டியிடும். அது யாருடன் என்பது தேர்தலின்போது முடிவு செய்யப்படும்.பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய மீனவர் பிரச்னை, ஈழத் தமிழர் பிரச்னை போன்றவற்றுக்கு தீர்வு காணப்படும். இலங்கைக்கு ஆயுதம் வழங்கினால் அது தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்பதால் பாஜக ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மறுத்துவிட்டார் என்றார் இல.கணேசன்.
பாஜக மாநிலச் செயலர் சிவகாமி பரமசிவம், கோட்ட பொறுப்பாளர் ஏ.சி.முருகேசன், மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகரன், பொதுச் செயலர் ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.