முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்களவை தேர்தலுக்கு பின் ஜெயலலிதா பிரதமராவது உறுதி: அமைச்சர் கே.பி.முனுசாமி

இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் மக்களிடம் தங்களது செல்வாக்கை இழந்து விட்டன. எனவே, எதிர்வரும் மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற முடியாது. மாநிலக்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:47 AM
பகிர்:

தேசிய கட்சிகள் மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டன என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக மகளிரணி சார்பில் மக்களவை தேர்தல் பணி மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:

இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் மக்களிடம் தங்களது செல்வாக்கை இழந்து விட்டன. எனவே, எதிர்வரும் மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற முடியாது. மாநிலக் கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சியை பிடிக்கும். தற்போது தமிழகத்தில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா இந்தியாவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக திகழ்ந்து வருகிறார். எனவே, மக்களவை தேர்தலுக்கு பின்னர் அவர் பிரதமராவது உறுதி. கட்சியினர் முதல்வரின் நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வெற்றிபெற பாடுபட வேண்டும் என்றார் அமைச்சர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்து மகளிரணி மாநில செயலரும், தூத்துக்குடி மேயருமான எல்.சசிகலா புஷ்பா பேசியபோது: தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகளில் 95 சதம் நிறைவேற்றியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்னையில் திமுக எதுவும் செய்யவில்லை. வறுமையில் வாடும் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கினார் முதல்வர். மேலும், பெண் சிசுக்கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல் நிலையங்களை என எண்ணற்ற திட்டங்களை பெண்களுக்காக கொண்டு வந்தவர் முதல்வர் ஜெயலலிதா. காவிரி உரிமையை மீட்டதோடு, மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்க இருந்த என்எல்சி பங்குகளை வாங்கி பொதுத்தறையை காக்க நடவடிக்கை முதல்வர் எடுத்தார். எனவே, ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று, மக்களவை தேர்தலில் வெற்றிபெற மகளிரணியினர் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில், சட்ட மன்ற உறுப்பினர் மனேரஞ்சிதம்நாகராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.அசோக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலர் கோவிந்தராஜ், தொகுதி செயலர் காத்தவராயன், நகர மன்றத் தலைவர்கள் கே.ஆர்.சி.தங்கமுத்து, பி,பாலகிருஷ்ணாரெட்டி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.என்.ஏ.கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மகளிரணி மாவட்ட செயலர் கல்பனா வரவேற்றார். மாவட்டத் தலைவர் வி.சி.சந்திரா நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →