தூத்துக்குடி துறைமுகத்தில் நின்ற கப்பலில் மூச்சுத் திணறி 2 தொழிலாளர்கள் சாவு
பர்மா நாட்டில் இருந்து பைன் மரக் கட்டைகளை ஏற்றிக் கொண்டு ஹமேன்தார் என்ற நியூசிலாந்து நாட்டு கப்பல் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வந்தடைந்தது. அந்த கப்பலில்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நின்ற கப்பலில் இருந்து சரக்குகளை இறக்க முயன்ற இரண்டு தொழிலாளர்கள் இன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
பர்மா நாட்டில் இருந்து பைன் மரக் கட்டைகளை ஏற்றிக் கொண்டு ஹமேன்தார் என்ற நியூசிலாந்து நாட்டு கப்பல் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வந்தடைந்தது. அந்த கப்பலில் இருந்து மரக்கட்டைகளை இறக்கும் பணியில் தூத்துக்குடியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.மரக்கட்டைகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில், சில ரசாயணப் பொருள்கள் கலந்த பூச்சி மருந்து மரக்கட்டைகளில் அடிக்கப்பட்டிருந்ததாம். மேலும், மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் செல்லும்போது ஆக்சிஸன் சிலின்டரை முகத்தில் மாட்டிக் கொண்டுதான் செல்ல வேண்டுமாம்.
ஆனால், மரக்கட்டைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செயின்ட் ஜான்ஸ் நிறுவன ஊழியர்களான தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த வில்சன் ராஜா மகன் விக்டர் மோகன் (39), லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த ஜோ பால் (49) ஆகியோர் ஆக்சிஸன் சிலின்டர் இல்லாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கூச்சலிட்டனராம். உடனே, கப்பலில் இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் ஆக்சிஸன் சிலின்டரை மாட்டிக் கொண்டு அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும், இருவரும் மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையெடுத்து, அங்கு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.