நகரமன்றக் கூட்டம் நடத்த தலைவி மறுப்பு: வி.கே. புரத்தில் துணைத்தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
விக்கிரமசிங்கபுரத்தில் நகர்மன்ற கூட்டம் நடத்த தலைவி மறுத்து வருவதை அடுத்து துணைத்தலைவர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வார்டு வார்டாக மக்களை சந்தித்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி
விக்கிரமசிங்கபுரத்தில் நகர்மன்ற கூட்டம் நடத்த தலைவி மறுத்து வருவதை அடுத்து துணைத்தலைவர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வார்டு வார்டாக மக்களை சந்தித்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம் நகர்மன்றத் தலைவி இ. மனோன்மணி (அதிமுக). துணைத் தலைவர் தி. கணேசபெருமாள் (அதிமுக). தலைவி மற்றும் துணைத் தலைவர், அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதங்களாக நகர்மன்றம் கூட்டம் நடத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.நகர்மன்றக் கூட்டம் நடத்தாத காரணத்தால் நகரில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் தேக்க நிலை நீடிப்பதாக புகார் கூறப்படுகிறது. நகரில் பல்வேறு வார்டுகளில் மின்விளக்குகள் எரியாதால் இருளில் மூழ்கி இருப்பதாக பொதுமக்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க நகர்மன்ற கூட்டத்தினை கூட்டுமாறு கோரிக்கை விடுத்தும் தலைவி, நகர்மன்ற கூட்டம் நடத்தவில்லை என ஆட்சேபம் தெரிவித்து நகரில் சுவரொட்டி, பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன.இதனிடையே நகரில் நிலவும் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை துணைத் தலைவர் தி. கணேசபெருமாள் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். திங்கள்கிழமை நகர்மன்ற 4,10 மற்றும் 15 வது வார்டு மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
செவ்வாய்க்கிழமை நகர்மன்ற 20, 21 மற்றும் 1 ஆவது வார்டுகளுக்கு சென்று மக்கள் சந்தித்து குறைகளை அவர்கள் கேட்டறிந்தனர். இதில் துணைத் தலைவருடன், நகர்மன்ற உறுப்பினர்கள் தவசு, ஆபரகாம், பாலகிருஷ்ணன், சக்திவேல், ஆர். ஜெயலட்சுமி, டி. ஜெயலட்சுமி, இசக்கியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.