கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு
பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து, கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து, கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கன்னிமார்கோயில் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகள் ராஜேஸ்வரி (21) என்பவருக்கும், பெங்களூரு, ராமச்சந்திராபுரம், 2-வது கிராஸ், 2-வது மெயின் ரோட்டைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் செல்வராஜ் என்பவருக்கும் 26.2.12-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது 200 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள பண்ட பாத்திரங்கள் வரதட்சிணையாக கொடுத்துள்ளார்கள்.
செல்வராஜ், சொந்த தொழில் செய்து மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிப்பதாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடித்த மறுநாள் செல்வராஜ் வேறொரு பெண்ணுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார். மேலும் அவரது மடிக்கணினியில் அப் பெண்ணின் படத்தை வைத்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இது குறித்து ராஜேஸ்வரி கேட்ட போது, அவர் எனது முன்னாள் காதலி என்று கூறினாராம். மேலும் நீ படிக்காதவள் என்று கூறி இகழந்துள்ளார்.
இது குறித்து ராஜேஸ்வரி, கணவரின் தாய் செல்வி, தந்தை ரெங்கசாமி மற்றும் கண்ணன் மனைவி மீனா, ரவி மனைவி பாண்டீஸ்வரி, சகோதரர் குமார் ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்கள் செல்வராஜூக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்கள். மேலும் கூடுதல் வரதட்சிணையாக ஒரு கார், அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு, 100 பவுன் நகை கொண்டுவந்தால்தான் நீ இங்கு வாழ முடியும் என்று கூறியுள்ளார்கள்.
இது குறித்து ராஜேஸ்வரி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசியுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜேஸ்வரியை, செல்வராஜ் பிளேடால் அறுத்து காயப்படுத்தியுள்ளார். மேலும் கூடுதல் வரதட்சிணை வாங்கி வந்தால்தான் வாழ முடியும் என்று கூறினார்களாம்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் செய்தார். போலீஸார் கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.