கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக நரிக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி தலைவர்களின் சார்பில் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம், வெள்ளிக்கிழமை மாலை முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கட்டனூர் ஊராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் ஊராட்சி தலைவர் த.சந்தானம் எந்த ஒரு காசோலையிலும் கையொப்பமிட்டு வழங்கவில்லை. கடந்த 6,7,8 மற்றும் 9 ஆகிய மாதங்களில் நடந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) மூலம் காசோலையில் பணம் எடுத்து பட்டுவாடா செய்துள்ளார்.
கடந்த 3-ம் தேதி கட்டனூர் ஊராட்சியில் 131 ஆள்கள், தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றிவதாக பணித்தள பொறுப்பாளர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார். மேற்குறிப்பிட்ட நாளில் ஊராட்சி தலைவர் ஊரில் இல்லை. இக்கிராமத்தில் ஒருவர் இறந்து விட்டதால் வேலை இல்லையென்றும் தெரிவித்துச் சென்றாராம். இதையறிந்த ஒன்றியக்குழு தலைவர் ஆனந்தவள்ளி மற்றும் உள்ளூர் அரசியல் வாதிகள் தலைவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அலுவலகத்துக்கு பொய்யான தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு, நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) கிராமத்திற்குள் ஆய்வு செய்ய கூறியுள்ளார். மேலும், கொடுத்த தகவல் பொய்யானது என அறிந்ததும், முறைகேடாக தகவல் அளித்த பணித்தள பொறுப்பாளர் தாற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளனர்.
இதேபோல், ஊராட்சி தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு தலைவர் அச்சுறுத்தியதோடு, மாற்றி விடுவதாகவும் கூறியுள்ளார். அப்போது, தலைவர் மீது தவறில்லை என்றும், அதனால் நடவடிக்கை எடுக்கவும் மறுத்துள்ளார். இதைக் காரணமாக வைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும், கிராம ஊராட்சிகளில் பசுமை குடியிருப்பு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் ஆகியவைகளில் பணம் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். அதனால், நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி முறைகேடுகளில் ஈடுபடும் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த அம்மனுவில் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.