அரசின் சலுகைகள் புறக்கணிக்கப்படும் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா கடை, மடை பகுதி: வேதனையில் விவசாயிகள்
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்ததாவது: தமிழகஅரசு கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாற்றான்தாய்
தமிழகஅரசின் வெள்ளம் மற்றும் வறட்சி குறித்த ஆய்வு மற்றும் நிவாரணம், சலுகைகள் உள்ளிட்டவை வழங்குவதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா கடை, மடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா புறக்கணிக்கப்படுவதால் விவசாயிகள் பெருத்த வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுடன், கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்கள் பகுதிகளும் அடங்கும். ஆனால் இன்று வரை தமிழக அரசால் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் கடலூர் மாவட்டத்திற்கு வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் விவசாயிகள் போராடி பெற்று வரும் நிலை உள்ளது.
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்ததாவது: தமிழகஅரசு கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாற்றான்தாய் மணப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. காவிரி டெல்டாவின் கடை, மடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் காவிரி நீர் மூலம் சுமார் 1 லட்சத்து 2 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. ஆனால் தமிழகஅரசால் அறிவிக்கப்படும் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சலுகைகள், குறிப்பாக மும்முனை மின்சாரம், வேளாண்மைக்கான மின்இணைப்பு, மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள்கள் ஆகியவைகள் கிடைப்பதில்லை. ஒவ்வொரு முறையும் விவசாயிகள் தமிழக அரசின் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சலுகைகளை கேட்டும், போராடியும் பெறும் நிலை உள்ளது. சமீபத்தில் காவிரி நீரின்றி சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக்குழுவினர் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள வரவில்லை. அதே போன்று தற்போது பயிர்கள் சேதம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட மத்தியஅரசால் அனுப்பி வைக்கப்பட்ட மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் குழுவும் கடலூர் மாவட்டத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் அரசின் ஏக, போக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மின்இணைப்பு, வறட்சி, வெள்ள நிவாரணம் வழங்கும்போது கடலூர் மாவட்டத்தை காவிரியில் ஒரு பகுதியாக கருதுவதே இல்லை.
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் இடம்பெற்றுள்ள கடலூர் மாவட்டம்: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் காவிரி மூலம் நேரடியாக பாசனம் பெறும் நிலங்களில் கடலூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. தமிழகஅரசு காவிரி டெல்டா பகுதிகளிலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்கள் இடம் பெற்றுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சலுகைகள், நிவாரணம் வழங்கப்படாமல் இதுபோன்று தமிழகஅரசு தொடர்ந்து நடந்து கொண்டால் உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடுப்பது தவிர வேறு வழியில்லை. எனவே தமிழகஅரசு உடனடியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பி பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்து, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.