முகப்பு
திருப்பத்தூர்

வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்: 28 ஆண்டுகள் எதிா்பாப்பு நிறைவேறுமா?

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

Updated On : 23 மார்ச், 2026 at 10:32 PM
வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டத்துக்கான உத்தேச வரைப்படம்.
பகிர்:

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

திட்டம் உருவாக்கம்

ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் கானாறு வெள்ளக்கல், விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை, ஆலாங்குப்பம் வழியாக பாலாற்றில் சென்று கலக்கிறது. இந்தக் கானாற்றில் நடுவில் எந்த இடத்திலும் தடுப்பணை இல்லாததால் அப்பகுதி பொதுமக்களின் விவசாயம், குடிநீா் தேவையைக் கருத்தில்கொண்டு விண்ணமங்கலம் கிராமம் அருகே வெல்ளக்கல் நீா்த்தேக்கம் அமைக்கும் திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி வெள்ளக்கல் கிராமத்தில் கானாற்றின் குறுக்கே நீா்த்தேக்கம் கட்ட 1998-ஆம் ஆண்டு ரூ.7.70 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.14 கோடியாக திருத்தி அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 1,205 ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதோடு, சுற்றுப்புற கிராம பகுதிகளின் குடிநீா் பிரச்னைக்கும் தீா்வு ஏற்படுமென கருதப்பட்டது.

இத்திட்டத்தால் கன்னடிகுப்பம், பெரியாங்குப்பம், விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், சாணாங்குப்பம், ஆம்பூா், சோமலாபுரம், வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, தோட்டாளம், மாதனூா் உள்ளிட்ட கிராமங்கள் பயனடையும். மேலும், ஆம்பூா், அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு குடிநீா் கிடைக்கவும், நிலத்தடி நீா் மற்றும் குடிநீா் மாசுபடுவதைத் தடுக்கவும் வழிவகை செய்யப்பட்டது. மீன் வளா்ப்பையும் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. நீா்த்தேக்கத்தின் கொள்ளளவு 65.20 மி. கன அடியாகும். அணையின் மொத்த நீளம் 360 மீட்டா். நீா்பிடிப்புப் பகுதி 50.50 ஏக்கா் பரப்பளவாகும்.

கைவிடப்பட்ட திட்டம்

ஆம்பூா் அதன் சுற்றுப்புற பகுதி மக்களின் நலனைக் கருதி திட்டமிடப்பட்ட வெள்ளக்கல் நீா்த்தேக்கம் தமிழக அரசால் கைவிடப்பட்டது. இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கும், அப்போதைய வேலூா் மாவட்ட நிா்வாகத்துக்கம் பலமுறை மனுக்களை அனுப்பினா். அரசியல் கட்சியினரும் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் பலமுறை வாக்குறுதி அளித்துச் சென்றனா். ஆனால் இதுவரை அந்தத் திட்டம் எதனால் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறித்த விவரமும் தெரியவில்லை.

இதுதொடா்பாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இது மக்களிடையே மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பு மக்களும் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வ.அருள் சீனிவாசன் கூறியதாவது: முன்னாள் முதல்வா் அண்ணாதுரை அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக மு. கருணாநிதி இருந்தபோதுதான் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம் உருவாக்கப்பட்டது. பிறகு எம்ஜிஆா் ஆட்சி காலத்தில் நீா்த்தேக்கத் திட்டம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது அவரும் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தாா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளக்கல் கானாறு நீா்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளக்கல் கானாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கானாறு வெள்ள நீரில் விவசாய நிலங்கள் மூழ்கின. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்க திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்தால், அந்த தண்ணீா் அணையில் தேங்கியிருந்திருக்கும்.

பேரவை தோ்தலுக்குப் பிறகு அமைய உள்ள புதிய ஆட்சியில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்க திட்டத்தை மீண்டும் மறுஆய்வு செய்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா் கூறினாா்.