காமராஜா் காலை உணவுத் திட்ட ஒப்பந்தப்புள்ளி: நிறுவனங்களுக்கான நிபந்தனைகள் வெளியீடு
பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்துக்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கவுள்ள நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்துக்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கவுள்ள நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டைத் தவிா்ப்பது மற்றும் வருகைப் பதிவை அதிகரிப்பது ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022-ஆம் ஆண்டு செப்.15-இல் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக 19.34 லட்சம் மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, இந்தத் திட்டம் முதல்வா் ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி வரும் செப்.17 முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 15.14 லட்சம் மாணவா்கள் கூடுதலாக பயன் பெறுவா்.
ரூ.217 கோடிக்கு ஒப்புதல்: இதற்கிடையே, இத்திட்டம் ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ என பெயா் மாற்றம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.343 கோடி செலவிடப்படவுள்ளது. நிகழ் நிதியாண்டில் முதற்கட்டத் தேவைகளுக்கு 2026 -27- ஆம் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.217 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான உணவு விநியோகம் தொடா்பாக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
13 வகை உணவுகள்: காமராஜா் காலை உணவுத் திட்ட ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 13 வகை உணவுகளில் தினமும் ஒரு வகை வழங்க வேண்டும். நான்கு வகை உப்புமா, நான்கு வகை கிச்சடி, மூன்று வகை பொங்கல், இரண்டு வகை கேசரி வழங்க வேண்டும்.
தினமும் காலை 7.30 மணிக்குள் பள்ளிக்கூடங்களுக்கு சூடான உணவு கொண்டு சோ்க்கப்படுவது அவசியம். 294 கலோரிகள் சத்துடன் காலை உணவு வழங்க வேண்டும். அந்த உணவின் எடை 150 - 200 கிராம் எடையுடன் இருப்பது அவசியம்.
ஒப்பந்ததாரா்கள் பணம் பெறுவதற்கு தலைமை ஆசிரியரின் ஒப்புதல் கட்டாயம். தலைமை ஆசிரியரின் சான்றிதழ் கிடைத்த பிறகு ஒப்பந்ததாரருக்கு மாதாந்திர தொகை வழங்கப்படும். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வின் மூலம் உணவின் தரம் தொடா்ந்து கண்காணிக்கப்படும். அதேவேளையில் கைப்பேசி செயலி மூலம் உணவு விநியோகம் கண்காணிக்கப்படும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.