திருக்கோவிலூரில் பேருந்து சிறைப்பிடிப்பு: மாணவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு
திருக்கோவிலூரில் பள்ளி மாணவர்கள் பேருந்தை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூரில் பள்ளி மாணவர்கள் பேருந்தை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூரில் இருந்து லாலாப்பேட்டை வழித்தடத்தில் சுமார் பத்து கிராமங்கள் உள்ளன. இந்தக் குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து மிகக் குறைவு. பெரும்பாலான கிராமங்களில் போக்குவரத்து வசதி இல்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் நகரப் பேருந்து தடம் எண் 26 புதிதாக இயக்கப்பட்டது. ஆனால், இந்தப் பேருந்தும் காலை 9 மணிக்கு திருக்கோவிலூருக்குப் புறப்பட்டு, திம்மச்சூர் சென்று 10.30க்கு திருக்கோவிலூரை வந்தடைகிறது. ஆனால் இந்தப் பேருந்தால், முக்கியமாக மாணவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று புகார் கூறப்பட்டது. எனவே, தாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக, காலை 8 மணிக்கு இந்தப் பேருந்து திருக்கோவிலூரில் இருந்து புறப்பட்டு 9.30க்கு வரும் வகையில் மாற்றியமைத்தல் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதை அடுத்து, இன்று காலை அந்தப் பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை சுமார் 2 மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறையினர் அங்கே வரவில்லை எனக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து ஊராட்சி மன்றத் தலைவர் வந்து போக்குவரத்துக் கிளை மேலாளரிடம் பேசி மாணவர்களிடம் சமரசம் பேசியதை அடுத்து, சாலைமறியல் கைவிடப்பட்டது.