முகப்பு
தற்போதைய செய்திகள்

நிவாரணத்திற்கான பயிர் கணக்கீட்டில் குளறுபடி: அதிருப்தியில் விவசாயிகள்

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள 5 ஒன்றியங்களில் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  காவிரி நீர் பாசனம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு போதிய நீர் இல்லாததால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் முழுமையாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:31 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிவாரணத்திற்கான பயிர் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்வதில் குளறுபடியினால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள 5 ஒன்றியங்களில் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  காவிரி நீர் பாசனம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு போதிய நீர் இல்லாததால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக பூவாலை, வயலாமூர், கொத்தட்டதை, சின்னகுமட்டி, பெரியகுமட்டி, அரியகோஷ்டி, அகரம், கோவிலாம்பூண்டி, கீழமூங்கிலடி, கீழ்அனுவம்பட்டு, மீதிகுடி, கிள்ளை, தா.சோ.பேட்டை, திருநாரையூர் எடையார் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் வறட்சியால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குமராட்சி ஒன்றியத்தில் 400 ஹெக்டேர்களும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் 225 ஹெக்டேர்களும், புவனகிரி ஒன்றியத்தில் 800 ஹெக்டேரும், காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்தில் 180 ஹெக்டேர்களும்,  பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 4 ஆயிரம் ஹெக்டேரும் என்று வேளாண்துறை அலுவலர்களால் புள்ளி விபரங்கள் எடு்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உழவர் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: தமிழக முதல்வர் 50 சதவீதம் மேல் பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்ததால், தற்போது மீண்டும் கணக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. கிட்டத்தட்ட ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் செலவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் முழுமையாக இந்த கணக்கீட்டில் இடம் பெறவில்லை. நடவு செய்த விவசாயிகள் பல ஆயிரம் செலவு செய்தும், இன்ஜின் மூலம் நீர் இறைத்து முழுமையாக வளர்ச்சியடையாத பயிர்களும் கணக்கில் எடுக்க வேளாண் அலுவலர்கள் மறுக்கின்றனர். ஏற்கனவே அரசுக்கு தெரிவித்த புள்ளி விபரத்திற்கு ஏற்றவாறு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முழுமையாக பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இந்த புள்ளி விபரங்கள் கைகொடுக்காது. எனவே கிராமம், கிராமமாக பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் வேளாண்துறை, வருவாய்த்துறை இணைந்து கணக்கீடு செய்ய வேண்டும் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.