சிதம்பரம்-ஆத்தூர் புதிய ரயில் பாதை திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்க கோரிக்கை
சிதம்பரம்-ஆத்தூர் (குமராட்சி, காட்டுமன்னார்கோயில் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர்,குன்னம் வழியாக)
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான புதிய ரயில்வே திட்டங்களை சேர்க்க வேண்டும் என தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார் அண்மையில் புதுதில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோரை நேரில் சந்தித்து கடிதம் அளித்து வலியுறுத்தினார்.
கடிதவிபரம் வருமாறு: சிதம்பரம்-ஆத்தூர் (குமராட்சி, காட்டுமன்னார்கோயில் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர்,குன்னம் வழியாக) புதிய ரயில் பாதை திட்டம் கடந்த 2008-2009 ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, 2009-ல் பாதை ஆய்வு அறிக்கை மற்றும் திட்ட மதிப்பீடு (167.5 கி.மீ/ திட்டத் தொகை ரூ.1049.92 கோடி) ரயில்வே போர்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். மயிலாடுதுறை-சென்னை வரை, சென்னை-மயிலாடுதுறை இருபுறமும் அதிகாலை புறப்பட்டு 9 மணி முதல் 10 மணிக்குள் சென்று அடையவும், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் இருபுறமும் இயக்கப்பட்டு, இரவு 10-11 மணிக்கு சென்றடையும் வகையில் புதிய சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி ரயில்களை (வைகை, பல்லம் போல) இயக்க வேண்டும். இதன் மூலம் மயிலாடுதுறை, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.
தற்போது இயக்கப்பட்டு வரும் ஜன் ஜதாப்தி ரயில் 12083/12084, கோயம்புத்தூர் முதல் மயிலாடுதுறை வரை ஒருபுறம் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பொதுமக்கள் மிகவும் பயன் உள்ளதாகவும், ரயில்வே துறைக்கு அதிக வருமான ஈட்டக்கூடியதாகவும் உள்ளது. எனவே இந்த ரயிலை கோயம்புத்தூர் முதல் கடலூர் பழையநகர் வரை நீட்டிப்பு செய்து இருபுறமும் தற்போதைய நேரத்தில் இயக்க வேண்டும். மேலும் மீட்டர் கேஜ் ரயில்பாதை இருந்த போது இயக்கப்பட்ட ரயில் எண் 110/P- 101/P செங்கோட்டை பாசஞ்சர் மற்றும் ஜனதா எக்ஸ்பிரஸ் 628/P-627/P ஆகிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இதன் மூலம் மெயின் லைன் ரயில் பயன்படுத்துவோர்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் என கடிதத்தில் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.