பிஆர்பி கிரானைட் தொழிற்சாலைக்கு மீண்டும் சீல்
பிஆர்பி கிரானைட் தொழிற்சாலை கட்டடங்கள் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டதன் காரணத்தால் இன்று நகர்ப்புற ஊரமைப்பு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பிஆர்பி கிரானைட் தொழிற்சாலை கட்டடங்கள் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டதன் காரணத்தால் இன்று நகர்ப்புற ஊரமைப்பு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஏற்கனவே கிரானைட் கற்களை சட்டத்துக்கு விரோதமாக வெட்டி எடுத்து கடத்தியதன் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ள பிஆர்பி கிரானைட் தொழிற்சாலையின் கட்டடங்கள், அனுமதி பெறாமல் கட்டப்பட்டதன் காரணத்தின் அடிப்படையில் புதிதாக கட்டப்பட்ட இந்த மூன்று கட்டடங்களுக்கு நகர்ப்புற ஊரமைப்பு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் இன்று காலை சீல்வைத்தனர்.
பிஆர்பி நிறுவனம் மதுரை மாவட்டம் மேலூர் அடுத்துள்ள தெற்குத்தெரு கிராமத்தில் பிஆர்பி கிரானைட் எக்ஸ்போர்ட் தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. பல ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங்களுக்கு நகர்ப்புற ஊரமைப்பு துறையின் அங்கீகாரம் பெறாமலேயே கட்டி முடித்துள்ளனர். கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்ட ஆய்வுக் குழு செய்த விசாரணையின் போது இது தெரிய வந்தது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் மாரிதாஸ் தலைமையில் 7 அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அங்கு அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த 3 மிகப்பெரிய கட்டடங்களுக்கு சீல் வைத்தது.
1971 நகர் ஊரமைப்பு மேம்பாட்டு சட்டப் பிரிவுகள் 56 மற்றும் 57ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலூர் டிஎஸ்பி மணிரத்னம் தலைமையில் போலிஸார் அதிகாரிகள் குழுவுக்கு பாதுகாப்பு அளித்தனர்.