முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கையை 2023-ம் ஆண்டில் 25% உயர்த்த இலக்கு: பி.பழனியப்பன்

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கையை 2023-ம் ஆண்டில் 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கையை 2023-ம் ஆண்டில் 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்கலை. ஆசிரியர் சங்கத்தின் (ஏ.யு.டி.) 65-வது மாநில மாநாட்டை தொடங்கிவைத்து அவர் பேசியது:

தமிழகத்தில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நகரத்தில் கிடைக்கும் தரமான கல்வி, கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு கலை கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை புதிதாக தொடங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 43 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்கலை. உறுப்புக் கல்லூரிகள் இனிமேல் தொடங்க வேண்டாம் என பல்கலை. ஆசிரியர் சங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று இனிமேல் அரசு கலை கல்லூரிகள் மட்டும்தான் தொடங்கப்படும் என முதல்வர் அண்மையில் நடந்த ஆட்சியர்கள் மாநாட்டில் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் 9 புதிய அரசு கல்லூரிகளை தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதிய கல்லூரிகள் தொடங்கும்போது பெண் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்தும் அளிக்கப்படும்.

கல்லூரிக் கல்வி ஒழுங்காற்றுச்சட்டம் 1976-யை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2006-ம் ஆண்டு முதல் இதுவரை நிரப்பப்படாமல் உள்ள 3,100 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசுப்பள்ளிகளில் தகுதித்தேர்வின் அடிப்படையில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராமல் 18,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். கிராமங்களில் கல்வி வளர்ச்சி பெற இந்த நடவடிக்கை உதவும்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் உத்தரவுபடி 6 மாணவர்களுக்கு ஒரு மடிக்கணினி இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் விலையில்லா மடிக்கணனி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் ஒரு மாணவருக்கு ஒரு மடிக்கணினி என்ற நிலை உள்ளது என்றார்.

மாநாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், ஈரோடு துணை மேயர் கே.சி.பழனிசாமி, பல்கலை. ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கே.பாண்டியன், பொதுச்செயலர் சி.பிச்சாண்டி, துணைவேந்தர்கள் ஜேம்ஸ் பிச்சை (கோவை பாரதியார் பல்கலை.), கே.முத்துச்செழியன் (சேலம் பெரியார் பல்கலை.), உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.