அண்ணாமலைப் பல்கலையில் 64 தனி அலுவலர்கள் அதிரடி மாற்றம், 128 பேருக்கு நோட்டீஸ்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் பணியாற்றும் 64 தனி அலுவலர்கள், 14 தொடர்பு அலுவலர்கள் பல்வேறு துறைகளுக்கும், பல்கலைக்கழக விடுதிகளுக்கும் இன்று இடமாற்றம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் பணியாற்றும் 64 தனி அலுவலர்கள், 14 தொடர்பு அலுவலர்கள் பல்வேறு துறைகளுக்கும், பல்கலைக்கழக விடுதிகளுக்கும் இன்று இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டும், 128 தனி அலுவலர்களுக்கு ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். அவருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஸ்துராஜ் ஆகிய இருவரை தமிழகஅரசு நியமனம் செய்தது. மேற்கண்ட இருவரும் கடந்த ஏப்.8-ம் தேதி திங்கள்கிழமை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா அலுவலகத்தில் பொறுப்பேற்றனர். பின்னர் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மீது சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து நிதிநெருக்கடியை போக்க ஷிவ்தாஸ்மீனா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழகத்தில் 12500 ஆசிரியர், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் பணியாற்றும் 64 தனி அலுவலர்கள், 14 தொடர்பு அலுவலர்கள் பல்வேறு துறைகளுக்கும், பல்கலைக்கழக விடுதிகளுக்கும் இன்று இடமாற்றம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்தில் பிஇ தகுதியுடைய தனி அலுவலர்கள் 128 பேருக்கு அந்த பணிக்கான கல்வித் தகுதி கிடையாது. எனவே ஏன் பணிநீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் 15 நாட்கள் அவகாசத்தில் பதில் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளில் ஹெல்பர், போன் பாய் போன்ற நிலைகளில் பணியாற்றிய ஊழியர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.