முகப்பு
தற்போதைய செய்திகள்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஆடித்தபசு விழாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சோமநாதர் சுவாமி விருஷாபரூடராக எழுந்தருளி ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஆடித்தபசு விழாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சோமநாதர் சுவாமி விருஷாபரூடராக எழுந்தருளி ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 12 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மன் கோயில் முகப்பு மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வீதி உலா வந்தார். கடந்த சனிக்கிழமை திருவிழாவின் 9 ஆம் நாளாக அம்மன் மாலையில் சப்பரத்தேரில் பவனி வந்து இரவு பூப்பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பட்டு வீதி உலா வருதல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய வைபவமாக நடைபெற்ற தபசு உற்சவத்தை முன்னிட்டு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த கால்பிரிவு கிராமத்தார் மண்டகப்படி முன்பு தபசுக் கோலத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சோமநாதர் சுவாமி பிரியாவிடை சமேதராய் விருஷாபரூடராக காட்சியளித்தார்.

பின்னர் சுவாமியை அம்மன் மூன்றுமுறை வலம் வந்தார். இதன்பின் அம்மனும் சுவாமியும் மாலைகள் மாற்றிக்கொள்ளுதல் நடைபெற்றது. அதன்பின்னர் கால்பிரிவு மண்டகப்படிக்குள் சென்றடைந்த ஆனந்தவல்லி அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளியும் சோமநாதர் சுவாமி விருஷப வாகனத்தில் எழுந்தருளியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திருமணமாகாத இளம்பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்க வேண்டி சுவாமியின் கையில் வைத்து எடுக்கப்பட்ட மாலைகளை திருமணமாகாத இளம் பெண்கள் வாங்கிச் சென்றனர். தொடர்ந்து ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பலவகை தீபாரதனைகள் காட்டப்பட்ட பின்பு இருவரும் கோயிலைச் சுற்றி வீதி உலா வந்தனர். தபசு விழாவில் ஏராளமான பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.திங்கள்கிழமை சந்தனக்காப்பு உற்சவத்துடன் இந்தாண்டு ஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழா நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.