முகப்பு
தற்போதைய செய்திகள்

திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன: அன்புமணி ராமதாஸ்

கடந்த 46 ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி, மாறி திராவிடக்கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:58 PM
பகிர்:

கடந்த 46 ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி, மாறி திராவிடக்கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக்கூட்டம் சிதம்பரம் சீனுவாசா திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி தலைமை வகித்தார். கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர்கள் செல்வக்குமார், ஆ.தரம்லிங்கம், கோ.ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதால் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் போலீஸார் பாட்டாளி மக்கள் கட்சி என பார்க்கவில்லை. சாதி பார்த்து நடவடிக்கை எடுத்து அடக்குமுறையை கையாளுகின்றனர். அதேபோல் நாமும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி பார்க்க வேண்டாம். சாதியை பார்க்க வேண்டும். பாமக 1989-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு 25-ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடுகிறது. இந்த வெள்ளி விழா ஆண்டில் பாமகவினர் கிராமம், கிராமாக சென்று நமது கொள்கைகளை மக்களுக்கு விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும்.  வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பாமக யாராலும் அழிக்க முடியாது. வேண்டுமென்றால் வழக்குகள் போடுவீர்கள், சிறையில் தள்ளுவீர்கள். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாட்டில் பங்கேற்ற கூட்டத்தை பார்த்து பயந்து ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ உள்ளிட்டோர் எங்களை அழிக்க முயற்சித்து வருகின்றனர். எங்களை யாராலும் அடக்க முடியாது. மருத்துவர் ராமதாஸின் அன்பால்தான் எங்களை அடக்க முடியும். திராவிடக்கட்சிகள் பிரியாணி, காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகின்றனர். எங்களது கூட்டம் ரத்தபாசத்தால் கூட்டப்படும் கூட்டம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கூட்டத்தில் பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ்படையாண்டவர், மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் கு.திருஞானம், பழ.தாமரைக்கண்ணன், மாநில நிர்வாகிகள் சண்முகம், சிலம்புச்செல்வி, நகரச் செயலாளர் முத்து.குமார், அண்ணாமலைநகர் சிவ.திருநாவுக்கரசு மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில் நகரத் தலைவர் பி.கே.அருள் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →