முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் வேளாண் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதியவர்கள் பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் வேளாண் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் ஜூலை 31-ம் தேதி நடைபெறும் பொறியியல்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:59 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் வேளாண் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் ஜூலை 31-ம் தேதி நடைபெறும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் 7,8,9 தேதிகளில் மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தமிழகத்தில் 7 மையங்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 22,500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். பின்னர் மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கைக்கான கவுன்சிலிங் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் எம்பிபிஎஸ், பிஎஸ்சி விவசாய படிப்புகள் அனுமதி சேர்க்கை முடிவுற்றது. மீதமுள்ள பிஇ, பிடிஎஸ், பி-பார்ம், பிபிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், வேளாண் படிப்புகள் ஆகியவற்றிற்கான நுழைவுத்தேர்வு எழுதியவர்களையும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு மாணவர்களும், பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து மாணவர்கள் நலன் கருதி மருத்துவம் மற்றும் வேளாண் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு எழுதியவர்களையும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கும் பொருட்டு, வரும் ஜூலை 31-ம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெறவுள்ள பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க வருமாறு அழைக்கப்படுகிறார்கள் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் சேர விருப்பம் உள்ள, நுழைவுத்தேர்வு எழுதிய மற்றும் 12-ம் வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம். மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புக்கடிதம் தனி, தனியே அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தமிழகஅரசின் பிளஸ்டூ உடனடி தேர்ச்சி பெற்ற, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதி இதுவரை கலந்தாய்வில் பங்கேற்காத மாணவ, மாணவியர்களும் மேற்கண்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம் என நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →