குடும்ப ரேசன் அட்டை முகவரி மாற்றம் செய்வதற்கு ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக இடைத்தரகர் கைது
விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப ரேசன் அட்டையில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.1000 லஞ்சம் வாங்கிய இடைத்தரகர் ஒருவர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம்
விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப ரேசன் அட்டையில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.1000 லஞ்சம் வாங்கிய இடைத்தரகர் ஒருவர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் மருதையா(39). இவர் மும்பையில் பெட்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். தற்போது, இவர் விருதுநகர் முத்தால் நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். தனது குடும்ப ரேசன் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தை கடந்த மாதம் 13-ம் தேதி அணுகியுள்ளார். இதற்கிடையே விருதுநகர் அருகே ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன்(63) என்ற இடைத்தரகர் முகவரி மாற்றம் செய்து தருவதாக மருதையாவிடம் கூறியுள்ளார்.
என்னைத் தவிர எந்த அலுவலரையும் அணுகினாலும் காரியம் முடியாது எனவும், இதற்கு ரூ.1200 வரையில் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார். முதலில் கொடுக்க தயங்கிய நிலையில் இறுதியாக ரூ.1000 தருவதாகவும் மருதையா ஒப்புக்கொண்டுள்ளார். உடனே இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.சியமளாவிடம் புகார் செய்தார். பின்னர், போலீஸாரின் ஆலோசனையின் படி ரசாயனம் தடவி இரண்டு ரூ.500 தாள்களை அளித்துள்ளனர்.அதையடுத்து, இன்று மாலையில் 4 மணிக்கு மருதையா இடைத்தரகரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பதாகவும், வெளியில் நிற்கும் படியும் கூறியுள்ளார். பின்னர், மருதையாவிடம் ரூ.1000 வாங்கும் போது சுற்றி நின்றிருந்த போலீஸார் இடைத்தரகரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Advertisement
அதையடுத்து வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று யாருக்காக கொடுப்பதற்கு பணம் வாங்கினார் என்பது குறித்து டி.எஸ்.பி.சியமளா உள்ளிட்ட போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். அதற்கு முன்னதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் என்பது தெரிந்ததும் அலுவலர்கள் வைத்திருந்த பணத்தை இடைத்தரகர்களிடம் கொடுத்து விரைவாக வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகமே அரை மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.