தகுதி அடிப்படையில் முதுகலை மருத்துவப்படிப்பிற்கான அனுமதி சேர்க்கை: ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தகுதி அடிப்படையில் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் அனுமதி சேர்க்கை செய்த பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு ஊழல் எதிப்பு இயக்கம் பாராட்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தகுதி அடிப்படையில் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் அனுமதி சேர்க்கை செய்த பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு ஊழல் எதிப்பு இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் அ.குணசேகரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 84 வருடங்களாக இயங்கி வந்த புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிநெருக்கடி, நிதிமுறைகேடு ஆகியவற்றினால் அரசே ஏற்று நடத்த முடிவு செய்து கடந்த மே 16-ம் தேதி சட்டப்பேரவையில் அதற்கான சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றியது.
பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனா பணி நியமனம் செய்யப்பட்ட பின்னர் பல்கலைக்கழகத்தில் ஊழல் பெருச்சாளிகள் பணிநீக்கம், பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிர்வாகியின் தினசரி அதிரடி நடவடிக்கைகளினால் பொதுமக்களிடம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இடைத்தரகர்கள் மூலம் பல லட்சங்கள் முதல் கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்த முதுகலை மருத்துவப் படிப்பிற்கான அனுமதி சேர்க்கை தகுதி அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது மாணவர்களி்டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள பல்கலை நிர்வாகி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறது என அறிக்கையில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.