விருதுநகர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலை தொடங்க அனுமதியில்லை: ஆட்சியர்
விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் வட்டார பகுதிகளில் இனிமேல் பட்டாசு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்று வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் வட்டார பகுதிகளில் இனிமேல் பட்டாசு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்று வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சிவகாசி, சாத்தூர் வட்டார பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. எனவே இப்பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் எதிர்பாரத விதமாக பெரிய மற்றும் சிறிய அளவிலான விபத்துக்கள் நடப்பதால் உயிர் சேதம், பொருள் சேதம் ஆகியவை ஏற்படுகிறது. இதனால், அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருவதால், அந்தந்த பகுதிகளில் பொது மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
Advertisement
எனவே இப்பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை உயர்வை, பொது நலன் கருதி கட்டுப்படுத்த வேண்டிய நிலை மாவட்ட நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதனால், இனி வரும் காலங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தடையி்ல்லா சான்றுகள் வழங்கப்படாது. இதேபோல், இம்மாவட்டத்தில் உள்ள மற்ற வட்டங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வெடிபொருள் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் என்ற பெயருடைய முதன்மை கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்களால் பட்டாசுகள் உற்பத்தி செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமம் பெறுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
இந்தச் சான்று வழங்குவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தால் எந்த பகுதி பகுதியில் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறதோ, அப்பகுதியில் பொதுநலனையும், பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் தொழில் தொடங்குவதற்கு அவசியம் உள்ளதா என வெடிபொருள் சட்டவிதிமுறைப்படி மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்கப்பட வேண்டியது உள்ளது.
இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு மேற்கண்ட வட்டாரங்களில் புதிதாக பட்டாசு ஆலை தொடங்குவதற்கு தடையில்லாச் சான்று வழங்க பொதுமக்கள் நலன் கருதி முடிவெடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டங்களை தவிர்த்து அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய வட்டாரங்களில் தடையில்லாச் சான்று வழங்குவதற்கு தடையில்லை என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.