ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு வேண்டும்: அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
சிதம்பரத்தில் அம்மையத்தின் கலந்தாய்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன் தலைமை வகித்தார். மு.ஆ.தமிழ்க்குமரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர்
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிதம்பரத்தில் அம்மையத்தின் கலந்தாய்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன் தலைமை வகித்தார். மு.ஆ.தமிழ்க்குமரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கோ.சீனுவாசன், பழனிவேல்முருகன், சதானந்தம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ப.பெருஞ்சித்திரன், அ.கனகசபை, குறிஞ்சிவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். க.சேகர் நன்றி கூறினார்.
கூட்டத்தில் வருவாய்துறையிலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறையை தனியாக பிரித்து தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும்; மெட்ரிக் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு அரசு அறிவித்த 25 சதவீத இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் அனைவருக்கும் தேர்ச்சி என்ற முறையை அரசு திரும்ப பெற வேண்டும்; ஆசிரியர்களின் பாடவாரியான காலிப் பணியிடங்களை முன்கூட்டியே இணையதளத்தில் அரசு வெளியிட வேண்டும்; ஒரே பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களை கட்டாய பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.