விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடியில் ஆக்கிரமிப்பை அகற்றுவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கிராம மக்கள் நேரில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக இருக்கன்டி கிராம மக்கள் சார்பாக ஊராட்சித் தலைவர் எஸ்.பவுன்ராஜ், ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், இருக்கன்குடியில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. தென்தமிழகத்தின் பிரசித்தி திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.இருக்கன்குடி கிராமத்தில் இருப்பதால், இக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இக்கோயிலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். திருக்கோயில் உருவான காலம் தொடங்கி, வளர்ச்சியடையாத நிலையிலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆற்றில் ஊற்று தோண்டி, வாளியில் தண்ணீர் இரைத்து பக்தர்கள் நீராடுவதற்கு உதவி செய்தனர். தற்போது, வளர்ச்சிக்கேற்ப டீசல் மோட்டார் வைத்து பக்தர்கள் குளிப்பதற்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தருகின்றனர். இந்த வருமானத்தை நம்பியே 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். மேலும், மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால், மோட்டார்களை பிரித்து எடுத்து விடுகின்றனர்.
அதேபோல், கோயில் செல்லும் சாலையில் ஆற்றின் இருபுறமும் 400-க்கும் மேற்பட்ட ஓலைவேய்ந்த கடைகள் உள்ளன. இவையனைத்தும் 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கடை போடுவார்கள். அதையடுத்து வரம் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் கடைகளை பிரித்து விடுவார்கள். அதனால், ஆண்டுதோறும் 8 மாதங்களே கடையை நடத்த முடியும். இதில், கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து பிழைப்பை நடத்தி வருகிறார்கள். இக்கடைகள் தான் தாழ்த்தப்பட்டோரின் வாழ்வாதரமாகவும் இருக்கிறது.
இந்நிலையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சாத்தூர் மூலமாக கோவில் அருகே தாற்காலிக கடைகள், மோட்டார் செட்டுகள் ஆகியவை அகற்றப்படும் என நோட்டீஸ், தகவல் பலகை மற்றும் செய்தித்தாள் விளம்பரம் மூலம் அறி்ந்து கொண்டோம். அதோடு, இன்று(18-ம்தேதி) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அனைத்து கடைகளுக்கும் நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. படித்து வேலை கிடைக்காத நிலையிலும், விவசாய காலங்களில் மழை பெய்யாத நிலையிலும், விவசாயம் அழிந்து வருகிறது. இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் சுயமாக சிறு கடைகள் நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தை நம்பியே வாழ்ந்து வருகிற சூழ்நிலையில் கிராம மக்கள் உள்ளனர். எனவே ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தை அழித்தால், வாழ்க்கைத் தரம் கேள்விக்குறியாகி விடும். அதோடு, இந்த வருமானத்தையே நம்பியே பிள்ளைகளின் கல்வி, உயர் கல்வி இருப்பதால் பாதிக்கும், அதனால் பல்வேறு குழப்பமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது.
அதனால், ஆக்கிரமிப்பு அகற்றுவதை நிறுத்தம் செய்து, இப்பகுதியில் உள்ள கடைகளையும், தண்ணீர் செட்டுகளையும் ஏதாவது துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அரசு விதிமுறைப்படி வாடகை நிர்ணயம் செய்து வசூல் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருக்கன்குடி கிராம பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் எஸ்.பவுன்ராஜ் ஆட்சியரிடம் நேரில் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.